* வே. அண்ணாதுரை,*
மாநில துணைச் செயலாளர் மற்றும்
மாவட்ட செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
# *விழுப்புண்களும்... துரோக விருதுகளும்...!*
# அரசு, தனியார் உட்பட பல்வேறு சமயங்களில் பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர்களுக்கு விருதுகளும், பாராட்டுப் பத்திரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன...!
இது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் சிறப்பான பணியினை ஊக்கப்படுத்துவதாகவும், மேலும் பணி சிறக்க உதவும் வகையிலும் அமைகிறது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.
# ஆனால்...
ஜனவரி 2019 ல் ஜாக்டோ-ஜியோ தமது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது...
வெற்றிகரமாக தொடங்கிய போராட்டம் பல்வேறு காரணங்களால் பின்னடைவை சந்தித்தது. பின்னடைவிற்கு முக்கிய காரணமும் நாம் தான்...
மேலும் ஒரு ஊதிய உயர்விற்காக அளவுக்கதிகமாக விசுவாசம் காட்டிய சில வட்டாரக்கல்வி அலுவலர்களும்...
# போகட்டும்... போராட்ட முடிவுவெறும் பின்னடைவோடு போயிருந்தால் நாம் யாரும் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. இப்பொழுது போல் நடந்தவை எதுவுமே நினைவில் இல்லாமல் அவரவர் வேலையை கருமமே கண்ணாக பார்த்துக் கொண்டிருக்கிறோமே அது போல் கடந்து போய் விடலாம்...
ஆனால்... ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சிறைச்சாலைகளில் அடைபட்டும்... வேதனைபட்டும்... அவர்களது குடும்பங்கள் சொல்லொணா துயரப்பட்டும்... மேலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் 17A,17B பெற்றும் இன்றளவும் அதனாலான பாதிப்புகளில் இருந்து மீளாமல் பெரும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர்.
# ஆனால்... இதனைப் பற்றி துளி கூட கவலையோ, அக்கறையோ, நன்றி உணர்வோ இல்லாமல் ஆசிரியர்கள் சுயநலமாய் செயல்படுவது மிகுந்த வெட்கத்துக்குரிய மற்றும் கவலைக்குரிய செயலாகும்.
# இதன் உச்சக்கட்டமாக, பாதிக்கப்பட்ட ஆசிரியரின் பணியிடத்தையே குறிபார்த்த குள்ள நரிகள் கூட்டத்தையும் நாம் சந்திக்க வேண்டிய அவலம் கூட நேர்ந்தது.
# அது மட்டுமல்லாமல், அரசு மற்றும் தனியார்கள் வழங்கும் விருதுகளுக்காகவும், பாராட்டுப் பத்திரங்களுக்காகவும், தற்பெருமைக்காவும், வீண் புகழுக்காகவும் ஆசிரியர்கள் அலறித் துடித்து பறப்பது சொல்லொணா துயரத்தை உண்டாக்குகிறது.
# சிறைச்சாலை சென்று மீண்டவர்கள்,17A, 17B வாங்கி இன்றளவும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் யாரும் அவர்களது சொந்த ப்ரச்னைக்காகவோ, தங்களது சுயதலத்திற்காகவோ, தனது குடும்பத்திற்காகவோ இந்த தண்டனைகளை பெறவில்லை. நமது ஆசிரியர் சமுதாயத்திற்காக இந்த தண்டனை முள் கிரீடத்தை ஏற்றுள்ளனர்.
# ஆனால், இது குறித்த உணர்வோ, அக்கறையோ, துளியும் பொறுப்புணர்வோ இல்லாமல் கலந்தாய்வுக்காக கவலைப்படுவதும், பாதிக்கப்பட்ட சகோதரனின் பணியிடங்களை பறிக்கப் பார்ப்பதுமாக துரோக வேலை அவர்கள் நெஞ்சில் பாய்ச்சுகின்றனர்.
# மேலும், அரசு மற்றும் தனியார் வழங்கும் விருதுகளுக்காகவும், பாராட்டுப் பத்திரங்களுக்காவும் வரிசை கட்டி நிற்பதும், கை கட்டி நின்று கெஞ்சுவதும் அதனை பெருமையாய் விளம்பரபடுத்துவதுமாய் எத்தனை தம்பட்டம், எத்தனை எத்தனை சுயநலம்?
இதயம் கனக்கிறது...! வலிக்கிறது...!
# உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த போராட்டத்தில் சிறைச்சாலை சென்றவர்கள், 17A, 17B பெற்றவர்கள் இனி எப்போதும் விருது பெற முடியாது என்பது...! நமக்காக, முகமறியா சகோதர, சகோதரிகளுக்காக, ஆசரிய சமுதாயத்திற்காக போராடி, பாதிக்கப்பட்டு நிற்பவரும், அவரது குடும்பத்தினரும் நமது கண்முன் தெரியவில்லை என்றால் கண்ணிருந்தும் நாம் குருடர்கள் தான்... காதிருந்தும் செவிடர்கள் தான்...!
# அவர்களுக்காக, அவர்களது தியாகத்திற்காக ஒரு தடவை மட்டும், கொஞ்ச காலம் அதாவது அவர்கள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடும் வரையிலாவது இந்த விருதுகளை உங்களால் புறக்கணித்திருக்க முடியாதா?
எனது சகோதரர்கள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை அரசோ, தனியாரோ வழங்கும் எந்த விருதையும் ஏற்க மாட்டோம் என ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயமும் ஒரு குரலில் புறக்கணித்திருந்தால் நமது ஒற்றுமையும், உணர்வும் ஒரு துளியாவது அரசாங்கத்திற்கு உரைத்திருக்கும்...
# ஆனால்.. எங்கெங்கும் ஜால்ராக்களின் சத்தம் காதைப் பிளக்கிறது... அந்த ஜால்ரா சத்தம் காதில் துரோக ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறது...!
# இன்னும் ஒரு படி மேலே போய்... யார் நம்மை பழி வாங்கனார்களோ, இன்னும் பழி வாங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களையே அழைத்து விழா நடத்துவதும், அவர்களுக்கு சத்தமாக ஜால்ரா போடுவதும், அவர்களை வானளாவ புகழ்வதுமாக பெரும் அசிங்கங்கள் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாய் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
# கொஞ்சமேனும் உணர்வுள்ளவர்கள், ஒரு துளியேனும் நன்றி உள்ளவர்கள், நமது சகோதரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்காக ஒரு நொடியாவது மனதார வருத்தப்படுபவர்கள், நமது வாழ்வாதார கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு தினந்தோறும் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருப்பதற்காக ஒரு நொடி கவலைப்படுபவர்கள் இது போன்ற விருதுகளை புறந்தள்ளியிருப்பார்கள்...
# இவையெல்லாம் விருதுகள் அல்ல... எனது சகோதரர்களின் விழுப்புண்களில் பாய்ச்சப்படும் துரோக விஷம் தடவிய குத்தீட்டிகள்...!
அவைகளின் பெயர் விருதுகள் அல்ல... நமது துரோகத்தின் அவமான நினைவுச் சின்னங்கள்..!!
# விருது என்ற பெயரில் நம்மை திசை திருப்பும், நமது உணர்வுகளை மழுங்கடிக்கும், நம் கண்களை நமது கைகளாலேயே குத்திக் கொள்ளும் ஈனச் செயல்களை அரசும், தனியாரும் திட்டமிட்டு முன்னெடுக்கின்றன..!
# ஒரு எழுத்தாளர் பாதிக்கப்பட்டால் தாம் வாங்கிய அத்தனை விருதுகளையும் அவர்கள் முகத்தில் தூக்கி எறிகிறது மானமுள்ள எழுத்தாளர் கூட்டம்...!
ஆனால்... நன்னெறிகளை, எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் கூட்டமோ... மானத்தை விற்று அவமானத்தைப் பரிசாகப் பெற அலைவது கண்டு நெஞ்சம் விம்மி வெடிக்கிறது...!
# இத்தனை துன்பங்களை ஆசிரிய சமுதாயத்திற்காக சுமந்து நிற்கும் எனது சகோதரன் சிந்திய இரத்தம், அதனை மறந்து, பெறும் நன்றி கெட்ட துரோக விருதுகளிலும், பாராட்டுப் பத்திரங்களிலும் படிந்திருக்கும் என்பதையும், அதனை நீ பார்க்கும் போதெல்லாம்... அது உன்னை புழுவை விட கேவலமாகப் பார்க்கும் என்பதையும் மறந்து விடாதே...!
# கலந்தாய்வுகளுக்காக துடிக்கிறோம்...! பதவி உயர்வுக்காக பரபரக்கிறோம்...!!
அது நியாயமாய் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையாய் இருந்தால் அதில் தவறேதுமில்லை... ஆனால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால் குற்றச்சாட்டு பெறப்பட்ட நமது சகோதரனுக்குரிய பதவி உயர்வு பணியிடத்தை பறித்துக் கொள்ளப் பார்க்கிறாயே... நீயெல்லாம் மனிதன் தானா? மாறுதல் பணியிடத்திற்கு போரட்ட வீரனின் இடத்திற்கு போகத்துடிக்கிறாயே... கழிவிரக்கம் என்பதே கிடையாதா? நீயெல்லாம் ஆசிரியனாய் இருந்து இந்த குழந்தைகளுக்கு என்ப கற்றுத் தரப் போகிறாய்? இந்த உன்னுடைய நயவஞ்சக புத்தியையும், துரோகத்தையும்... நன்றி கெட்ட குணத்தையுமா?
# ஒரு வேளை... ஏதாவது அதிசயம் நிகழ்ந்து பங்களிப்பு ஓய்வூதியம் இரத்தானால், ஊதிய மாற்றங்கள் நிகழ்ந்தால் தற்போதைய கல்வித் துறை சீரழிவு நிறுத்தப்பட்டால் அது போராட்ட களத்தில் எமது சகோதரர்கள் சிந்திய இரத்தத்தினால் பெறப்பட்டதே ஒழிய... புகழுக்கும், பெருமைக்கும் ஆளாய் பறந்து நம்பிக்கை துரோகங்களாலும், வஞ்சனகளாலும் பெறப்பட்ட விருதுகளாலோ... பாராட்டுப் பத்திரங்களாலோ அல்ல என்பதை மறந்து விடாதே...!
# பார்ப்போம்...! இனியாவது விருதுகள் மற்றும் பாராட்டுப் பத்திரங்கள் என்ற பெயரில் அரசோ, தனியாரோ வழங்கும் துரோக, வஞ்சக நினைவுச் சின்னங்களை எத்தனை பேர் புறக்கணிக்கின்றனர் என்பதை...!
எத்தனை பேர் தாங்கள் ஏற்கனவே பெற்று சுமந்து கொண்டு திரியும் அவமானச் சின்னங்களை விட்டெறியப் போகிறார்களென்று...!!
# இன்னும் சிறிதாய்... என் சகோதரர்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வரை எனக்கு பதவி உயர்வு வேண்டாமென்றோ... மாறுதலில் பங்கேற்க மாட்டேனென்றோ சொல்லமாட்டாயா என்ற பெரும் ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்... ஆசிரியப் பேரினம் செய்திட்ட துரோகங்களை மறந்து... ஆசிரியப் பேரினம் போராட்ட வீரர்களின் முதுகில் குத்திய இரத்தம் படிந்த நயவஞ்சக கத்தி தரும் மரண வலியோடு!!!!