Tuesday, 8 December 2015

அரசுப் பள்ளிகளில் 9,623 கூடுதல் ஆசிரியர்கள்: ஆன்லைன் மூலம் பணியிடங்களை நிரப்ப முடிவு

அரசுப் பள்ளிகளில் 9,623 கூடுதல் ஆசிரியர்கள்: ஆன்லைன் மூலம் பணியிடங்களை நிரப்ப முடிவு

அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 9,623 ஆசிரியர் பணியிடங்களை இணையவழி (ஆன்லைன்) தேர்வு மூலம் நிரப்ப தில்லி அரசு முடிவு செய்துள்ளது. 
இதன்மூலம், பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், நூலகர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதால் ஆண்டுதோறும் அரசுக்கு ரூ.540 கோடி கூடுதல் செலவு ஆகும் என தில்லி அரசு கூறியுள்ளது. 
இது குறித்து தில்லி அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் பற்றி முன்மொழிவு ஒன்றை அண்மையில் கல்வித் துறை தாக்கல் செய்தது. 
அதில் அரசுப் பள்ளிகளில் முதல்வர்-25, துணை முதல்வர்-365, பட்ட மேற்படிப்பு முடித்த ஆசிரியர்கள்-4,940, தொழில்நுட்பக் கல்வி ஆசிரியர்கள்-2,933, உடற்கல்வி ஆசிரியர்கள்-860, ஓவிய ஆசிரியர்கள்-256, நூலகர்கள்-38, ஆய்வக உதவியாளர்கள்-208 என மொத்தம் 9,623 பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. 
இந்த முன்மொழிவுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம்  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்-மாணவர் விகிதாசாரப்படி  ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 
கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் இணைய வழியில் (ஆன்லைன்) நிரப்பப்படும். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் இந்திய கல்வி ஆலோசனை நிறுவனம் (இடிசிஐஎல்) மூலம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இணைய வழித் தேர்வு நடத்த ஏதுவாக அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகளை, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் உள்ள கல்வி மையங்களில் உருவாக்கும் பணியை இந்நிறுவனம் மேற்கொள்ளும். கூடுதல் ஆள்களை நியமித்துக்கொள்ளவும் அந்நிறுவனத்துக்கு அதிகாரம்  அளிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தில்லி கல்வித் துறையின் கீழ் ஒப்பந்த ஆசிரியர்களாக இருப்பவர்கள் பங்கேற்றால், அவர்களின் பணி அனுபவம், வயது அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இத்தேர்வில் "அனைவருக்கும் கல்வி' திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்களும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் மூலம் ஆண்டுதோறும் அரசுக்கு ரூ.540 கோடி கூடுதல்  செலவு ஏற்படும். எனினும், தேர்வு நடத்தி புதிய பணியிடங்களை நிரப்புவதற்கு, நிகழாண்டில் மட்டும் ரூ.666 கோடியை ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment