Tuesday, 15 December 2015

அரையாண்டு தேர்வு விடுமுறையை உடனே அறிவிக்க வேண்டும் கலை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

அரையாண்டு தேர்வு விடுமுறையை உடனே அறிவிக்க வேண்டும் கலை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
அரையாண்டு தேர்வு விடுமுறையை உடனே அறிவிக்க வேண்டும் என்று கலை ஆசிரியர் கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.


செயற்குழு கூட்டம்


கலை ஆசிரியர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம், கோவையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கனக சபாபதி முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முரளி வரவேற்று பேசி, தீர்மானங்கள் முன்மொழிந்தார். அதன்படி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-


தமிழகத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், கலை ஆசிரியர்கள் தங்களுடைய 2 நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். அதை மாவட்ட கருவூலங்கள் மூலமாக பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற கலை ஆசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதுடன், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி என்ற பெயருக்கு, நிதியுதவி அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு இந்த சங்கம் நன்றி தெரிவித்து கொள்கிறது. முதல் கட்டமாக ரூ.2 லட்சம் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


கடலூரில் தூய்மைப்பணி


இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், அந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, 122 சிறப்பு ஆசிரியர்கள் தூய்மைப்பணியில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. மழை பாதிப்பு காரணமாக, தமிழகத்தில்நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள், அடுத்த மாதம் (ஜனவரி) நடைபெறும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.மழை பாதிப்பு இல்லாத இடங்களில் அரையாண்டு தேர்வுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. தேர்வு விடுமுறை குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆண்டுக்கு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 210 நாட்கள், தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு 220 நாட்கள் மட்டுமே வேலைநாள் ஆகும்.


விடுமுறை அறிவிப்பு


எனவே மழை பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.இல்லாவிட்டால் இந்த ஆண்டின் பள்ளி வேலை நாட்கள் அதிகரித்துவிடும். இதனால் விடுமுறை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் 18 ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (ஜேக்டோ) நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கலை ஆசிரியர் ராஜகோபால் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment