வங்கக்கடலில் நீடிக்கும் மேலடுக்குச் சுழற்சி: மழைக்கு வாய்ப்பு
மாலத்தீவு, அதை ஒட்டிய பகுதியில் நீடிக்கும் மேலடுக்குச் சுழற்சியால், தமிழகம், புதுச்சேரியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:
மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதியில் நிலவிய மேலடுக்குச் சுழற்சியானது, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் மாலத்தீவு, அதை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த நிகழ்வின் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மழை பெய்யும். அடுத்து வரும் 3 நாள்களுக்கு ஆங்காங்கே மிதமான மழை பெய்யும் வாய்ப்புண்டு. இருப்பினும், பலத்த மழை எச்சரிக்கை எதுவும் இல்லை.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் ( மி.மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சிவகிரியில் 40 மி.மீட்டர் மழை பதிவாகியது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 30 மி.மீ, கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் தலா 20 மி.மீட்டர் மழை பதிவாகியது. மேலும் நீலகிரி மாவட்டம் நடுவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், கோவை மாவட்டம் வால்பாறை, சின்னகல்லார், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கன்னியாகுமரி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் போன்ற பகுதிகளில் தலா 10 மி.மீ மழை பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment