Tuesday, 5 January 2016

ALL TRS TN : போலி சான்றிதழ் விவகாரம்: 40 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

போலி சான்றிதழ் விவகாரம்: 40 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு
தர்மபுரி: போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த விவகாரத்தில், 40 ஆசிரியர்களின் ஜாதி, கல்வி சான்றிதழ்களை, போலீசார் சரிபார்த்து வருகின்றனர்.

போலி ஜாதி மற்றும் கல்வி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பாராதியார் நகரைச் சேர்ந்த முனியப்பன், 37, கிருஷ்ணகிரி மாவட்டம் கூச்சானுாரைச் சேர்ந்த செந்தில்குமார், 38, இவர்களுக்கு, போலி சான்றிதழ் தயார் செய்து கொடுத்த, கிருஷ்ணகிரி திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன்,
42, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரித்ததில், ராஜேந்திரன் மூலம் பலர் போலி ஜாதி, கல்வி சான்றிதழ் பெற்று, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டங்களில் திடீர் விடுமுறை எடுத்த, 40 ஆசிரியர்கள் குறித்த விபரங்களை, கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து போலீசார் பெற்றனர். திடீர் விடுமுறைக்கான காரணம் மற்றும் அவர்கள் சான்றிதழின் உண்மை தன்மை குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் குறித்த விபரங்களையும் வழங்குமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால், ஆசிரியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment