விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி கற்க அனுமதி கிடைக்காததால் ஆசிரியர்கள் அவதி
விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர் கல்வி கற்க முடியாமலும், பதவி உயர்வு பெற முடியாமலும் அவதி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என 1170-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அஞ்சல் வழியில் எம்.ஃபில் படிக்க மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் படிக்கலாம். படிப்பை காரணம் காட்டி அடிக்கடி விடுப்பு கேட்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் இணை இயக்குநர் அலுவலகம் வாயிலாக அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் பல ஆசிரியர்கள் எம்.ஃபில் படிக்க அனுமதி கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு மனு அளித்தனர். ஆனால், மாவட்டக் கல்வி அலுவலகம் தரப்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர், எம்.ஃபில் சேர்ந்ததற்கான சேர்க்கை அட்டை (அட்மிசன் கார்டு), வழிகாட்டியின் ஒப்புதல் சான்றிதழ் வழங்க வேண்டும் என கேட்பதாக கூறப்படுகிறது. எம்.ஃபில் வழி காட்டி என்பது கடைசி பருவ தேர்வுக்கு முன்னர் தான் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு நியமிக்கப்படுவார். எனவே, இதுபோன்ற வழிகாட்டி ஒப்புதல் சான்றிதழ் வாங்க முடியாமல் பலர் அவதி அடைந்துள்ளனர். சில ஆசிரியர்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலில் வழிகாட்டியிடம் தங்கள் நிலையை கூறி சான்றிதழும் பெற்று வந்துள்ளனர். இந்த ஆசிரியர்களது விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வாயிலாக சென்னையில் உள்ள பணியாளர் தொகுதி இணை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அலுவலகம் சார்பில், உயர்கல்வி கற்க விண்ணப்பித்த சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எம்.ஃபில் படிப்புக்கு சேர்ந்து விட்டு, எப்படி விண்ணப்பிக்க அனுமதி கேட்கிறீர்கள் என அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு 17 ஏ பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், உயர்கல்வி கற்க வேண்டும் என நினைத்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, மற்றும் பணப் பலன்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி கூறியதாவது: கடந்த 2007 வரை உயர் கல்வி கற்க விரும்பும் ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை. தற்போது, மாணவர்கள் கல்வி பாதிக்கக் கூடாது என்பதாலும், முதுகலை ஒரு பாடப் பிரிவில் படித்து விட்டு எம்.ஃபில் வேறு ஒரு பாடப் பிரிவில் சேரக் கூடாது என்பதாலும், கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் தகுதியில்லாத ஆசிரியர்கள் இனி வரும் காலங்களில் இதுபோன்று செய்யக் கூடாது என எச்சரிக்கை செய்துள்ளோம். யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றார்.
No comments:
Post a Comment