Wednesday, 24 August 2016

வெளி மாவட்டங்களுக்கு 83 இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்

வெளி மாவட்டங்களுக்கு 83 இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்
திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த 83 இடைநிலை ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றனர்.

தமிழக தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 21) நிறைவடைந்தது. இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) நடைபெற்றது.


திருவண்ணாமலை டேனிஸ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வையில் இணையதளம் வாயிலான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 292 இடைநிலை ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல விரும்பி கலந்தாய்வில் கலந்துகொண்டனர். இவர்களில் 83 பேருக்கு மட்டுமே தாங்கள் விரும்பிய மாவட்டத்துக்கு இடமாறுதல் கிடைத்தது. இதையடுத்து, 83 பேரும் இடமாறுதல் பெற்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள் புதுக்கோட்டை, கடலூர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றுச் சென்றனர். இவர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் இடமாறுதல் ஆணைகளை வழங்கினார்.

22 பேர் திருவண்ணாமலை வருகை: இதேபோல, இதர மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 22 ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளனர். இவர்கள் ஓரிரு நாளில் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் பணியில் சேர்வார்கள் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment