தொடரும் குழந்தைகள் பலி... ஊரை விட்டு வெளியேறும் மக்கள்!
திருத்தணி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர். தொடரும் குழந்தைகள் பலியால் ஊரைவிட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். இதனால் மாவட்ட கலெக்டர் இந்த கிராமத்தில் நேரடி ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே காவேரிராஜபுரம் உள்ளது. இந்த கிராம மக்கள் கடந்த ஒருவார காலமாக மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சலில் பாதிக்கப்பட்ட யுவராஜ் என்ற 6 வயது குழந்தை கடந்த வாரம் பலியானார். அடுத்து, சந்தோஷ் என்ற 6 வயது குழந்தை உயிர் இழந்தான். தொடர்ந்து இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் கிராம மக்களை பீதிகளுக்குள் ஆழ்த்தியதோடு, பலர் கிராமத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த தகவல் மாவட்ட நிர்வாகத்துக்கும், சுகாதாரத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் காவேரிராஜபுரத்துக்கு சென்றனர்.
அங்குள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், காவேரிராஜபுரத்திலிருந்து சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட தேவா என்பவரின் 9 வயது மகன் மோகன்குமாரும், காவேரிராஜபுரம் கிராமத்தின் அருகே உள்ள ஆதிஆந்திரவாடா கிராமத்தை சேர்ந்த செங்கையா என்பவரின் 6 வயது மகன் மோகனும் இன்று காலை பலியாகினர். ஒரே வாரத்தில் 4 குழந்தைகள் பலியான சம்பவம் இரண்டு கிராமங்களிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு கிராமங்களிலும் தற்போது 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 குழந்தைகள் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட பெரியவர்களும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் 40 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அரசு தரப்பில் எந்தவித புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி நேரில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், "இந்த காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான மருந்து, மாத்திரைகள் உள்ளன. காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளனர். இப்போதைக்கு இந்த காய்ச்சலை டெங்கு என்று சொல்ல முடியாது"என்றார்.
இந்த சூழ்நிலையில் கிராமத்தில் காய்ச்சல் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றன. இந்த காய்ச்சலுக்கு தொடர்ந்து குழந்தைகள் பலியாகி வருவது அவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிராமத்தை தற்காலிகமாக காலி செய்து விட்டு உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment