ஆதார் முகாம் நடத்துவதில் இழுபறி : தனியார் பள்ளி மாணவர்கள் அவதி
ஆதார் முகாம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தனியார் பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை மற்றும் இலவச நலத்திட்ட உதவிகளை, ஆதார் எண் அடிப்படையில் வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அந்த தகவல்களை, பள்ளிக்கல்வி மின்னணு நிர்வாக திட்ட தொகுப்பு மையத்தில் இணைக்க அறிவுறுத்தப்பட்டது. பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆதார் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பள்ளிகளில், உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருவாய் துறையினர் மூலம், ஆதார் முகாம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டாலும், பெரும்பாலான பள்ளிகளில், இன்னும் முகாம் நடத்தப்படவில்லை. முகாமிற்கான ஆவணங்களை மாணவர்களிடம் பல முறை பெற்றும், முகாம் நடத்த அதிகாரிகள் உதவாததால், பெற்றோரையே ஆதார் எண்ணில் பதிவு செய்ய கட்டாயப்படுத்த வேண்டிஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment