Saturday, 10 September 2016

அக்டோபர் 2ல், காந்தி ஜெயந்தியன்று முதல் பாலிதீன் பைகள் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளது

அக்டோபர் 2ல், காந்தி ஜெயந்தியன்று முதல் பாலிதீன் பைகள் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளது

நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று முதல் பாலிதீன் பைகள் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளது. பிளாஸ்டிக்கால் நாள்தோறும் அதிகரித்து வரும் தீமைகளை சொல்லி மாளாது. சுற்றுச்சூழல் கெட்டு மனிதர்கள் மட்டுமின்றி, வன விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பாலிதீன் குப்பைகளால் பூமிக்குள் நீர் இறங்காமல் நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே பாலிதீன் பயன்பாட்டை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் பாலிதீன் பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. 

இருந்த போதிலும் பாலிதீன் பைகள் பயன்பாடு காரணமாக சுற்றுலா தலங்கள் பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகளும் அவற்றை உணவு பொருட்களுடன் சாப்பிடுவதன் மூலம் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பாலிதீன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், ‘‘தேசிய நினைவு சின்னங்கள், அனைத்து சுற்றுலாத்தலங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வனப்பகுதிகள் ஆகியவற்றில் முழுமையாக பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முதல் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. 

சுற்றுலாத்தலங்களில் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் கொண்டு செல்ல மட்டும் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படும். இதை தவிர  சுற்றுலாத்தலங்களில் எந்தவித பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்கள், பைகள் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி முற்றிலுமாக மறுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு எழுந்துள்ளது.


No comments:

Post a Comment