Powered By Blogger

Saturday, 20 May 2017

பணிநிரவல் இரத்து செய்ய வேண்டும் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* கோரிக்கை

*பணிநிரவல் இரத்து செய்ய வேண்டும் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* கோரிக்கை



*மதிப்புமிகு பள்ளிகல்வி முதன்மைச் செயலாளர*்

அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை



*தொடக்கக் கல்வித்துறையில் பணிநிரவல் கலந்தாய்வை இரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை*

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 19.5.2017 முதல் 31.5.2017 வரை நடைபெற்று வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் இவ்வாண்டு பணிநிரவல் இல்லை என்ற செய்தி ஆசிரியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் அதே வேளையில் தொடக்கக் கல்வித்துறையில் பணிநிரவல் கலந்தாய்வு என்பது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்பணிநிரவலுக்கான மிக முக்கியமான காரணம் கட்டாயக் *கல்விச் சட்டம் 2010 அடிப்படையில்* என்கின்றனர்.

உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்த முதலில் தொடக்கக் கல்வித்துறையில் பயிலும் மாணவர்களின் தரம் உயரவேண்டும். அதற்கு தொடக்கக் கல்வித்துறையில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்யாமல்  குறைந்து மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு பணிநிரவலை தவிர்த்து, அப்பள்ளியில் அவர்கள் தொடர்ந்து பணியாற்றிட அனுமதித்தால் மாணவர்களின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும் . மேலும் சில நடுநிலைப்பள்ளிகளில் 5ம் வகுப்பு போதிக்கக் கூட பட்டதாரி ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.



தமிழகத்தில் கட்டாயக் கல்விச்சட்டம் 15.11.2011 முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளது.  கட்டாயக் கல்விச் சட்டத்தில் முதலில் கணக்கு மற்றும் அறிவியல் என்றும் , இரண்டாவதாக சமூக அறிவியல் என்றும் மூன்றாவதாக மொழிப்பாடம் என்றும் உள்ளது. இதில் கணக்கு மற்றும் அறிவியல்  என்று தான் உள்ளது கணக்கு (அல்லது) அறிவியல் என்று இல்லை. அவ்வாறு  இருக்கும்  போது கணக்கு, அறிவியல் ஆகிய இரண்டு பாட ஆசிரியர் நிரப்பிய பிறகு தான் மூன்றாவதாக சமூக அறிவியல் போடவேண்டுமா அல்லது இரண்டாவதாக  சமூக அறிவியல் போட வேண்டுமா என்ற குழப்பம் உள்ளது.  முதலில் இந்தக் குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டும்.



*2011-ல் இருந்து 2015 வரை நடுநிலைப்பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர்  என்ற கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி 6,7,8 ஆகிய மூன்று வகுப்புகளுக்கு 3 பட்டதாரி ஆசிரியர்கள் தான் நியமித்து இருக்க வேண்டும்.* அதைப் பின்பற்றாமல், மாணவர்களின் எண்ணிக்கை கருத்தில் கொள்ளாமல், *சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு 4வதாக ஒரு பட்டதாரி ஆசிரியர் (30 மாணவர்கள் உள்ள ஒரு சில பள்ளிகளில்), என  ஆசிரியர்களுக்குப்  பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது.* இப்போது மாணவர்களின் எண்ணிக்கை குறையும் போது 2010க்கு பின் பதவி உயர்வு பெற்ற சமூக அறிவியல், தமிழ் பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யாமல்,  2010 முன்பே அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் அறிவியல், ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் என்கின்றனர்.



*2011 முதல் 2015 வரை கட்டாயக்கல்விச் சட்டத்தை பின்பற்றாமல்  பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிவிட்டு, 2016 முதல் கட்டாயக் கல்விச் சட்டப்படி பணிநிரவல் என்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.* கட்டாயக்கல்விச் சட்டத்தின்படி 1 முதல் 8 வகுப்பு வரை, வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற விதி உள்ளது. அவ்விதியைப் பின்பற்றாமல் பட்டதாரி ஆசிரியர் பணிநிரவலில் மட்டும் கட்டாயக்கல்விச் சட்டத்தைப் பின்பற்றுவது சரியா.



2011 முதல் கட்டாயக் கல்விச் சட்டத்தை பின்பற்றாமல் நடுநிலைப்பள்ளிகளில் முறைகேடாக வழங்கப்பட்ட  பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வினை இணைஇயக்குநர் தலைமையில் ஆய்வு செய்து, அவற்றை இரத்து செய்யவேண்டும். *இதற்கு காரணமான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோரின் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.*



2004 முதல் பாடச் சுமை கருத்தில் கொண்டு கணக்கு, அறிவியல், ஆங்கிலம் பாடங்களைக் கற்பிக்க சர்வசிக்ஷா அபியான் திட்டம் மூலம்  பட்டதாரி ஆசிரியர் 6,7,8 வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கட்டாயக் கல்விச் சட்டப்படி அறிவியல் ஆசிரியர் பணியிடம் உபரி என்று பணிநிரவல் செய்துவிட்டு, அப்பணியிடம் சமூக அறிவியல் என்று கூறுவது வியப்பாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பணிநிரவல் என்றால் முதலில் சமூக அறிவியல் தான் உபரி. ஆனால் தொடக்கக் கல்வித்துறையில் அறிவியல் தான் உபரி என்று கூறுகிறார்கள். எப்படி ஓரே பணிநிரவல் இருதுறைக்கு எவ்வாறு வேறுபடுகிறது.



எனவே, தொடக்கக் கல்வித்துறையில் நடைபெற உள்ள *பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வேண்டுமாய் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*கோரிக்கை சார்பாக கேட்டுக் கொள்கிறோம். பணிநிரவல் கட்டாயம் செய்வோம் என்ற நிலையில், 2011 முதல் கட்டாயக் கல்விச் சட்டத்தை பின்பற்றாமல் நடுநிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களை நிரவல் செய்யவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

*கு.தியாகரஜன்*
மாநிலத் தலைவர்

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

செய்தி:- மு.சிவக்குமார், திருப்பத்தூர்.

No comments:

Post a Comment