Monday, 7 December 2015

பிபிசி வானிலை முன்னெச்சரிக்கையால் 'பீதி'யும் தமிழ் வலைப்பதிவரின் ஆறுதல் விளக்கமும்.

பிபிசி வானிலை முன்னெச்சரிக்கையால் 'பீதி'யும் தமிழ் வலைப்பதிவரின் ஆறுதல் விளக்கமும். 

சென்னையில் கனமழை பெய்யத் தொடங்கி ஒரு மாத காலம் ஆகிவிட்டது. மழையின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்ப முடியுமா என்ற மன அவசத்தில் மக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், அதிகாரபூர்வ வானிலை மைய எச்சரிக்கைகள் தவிர, பிபிசி வானிலை முன்னறிவிப்பும் தன் பங்குக்கு மக்களிடையே கணிசமாக கவனத்தைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், வரும் புதன்கிழமை தொடங்கி சென்னையில் கனமழை மீண்டும் புரட்டியெடுக்கப்படவுள்ளதாக பிபிசி முன்னெச்சரிக்கையில் விளக்கப்படத்துடன், அதன் அதிகாரபூர்வ ட்விட்டரில் வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்ட அந்த ட்வீட், தமிழக இணையவாசிகளிடையே பெரும் பீதியை உண்டாக்கின.

இதையடுத்து, 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தை நடத்திவரும் பிரபல தமிழ் வானிலைப் பதிவர், பிபிசி கணிப்புகளின் தற்காலிகத் தன்மையை வெளிப்படுத்தி பதிவிட்டுள்ளார். அதன் விவரம்:

பிரிட்டனில் யுனைடெட் கிங்டம் வானிலை கணித மாதிரியைக் கடைபிடித்து முன்னெச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. உலக வானிலை முன்னெச்சரிக்கை மையம் (GFS) மற்றும் வானிலை முன்னறிவிப்புக்கான ஐரோப்பிய மையம் ((ECMWF) ஆகியவற்றுக்கு அடுத்த படியாக பிரிட்டன் வானிலை மையம் 3-ம் நிலையில் உள்ளது.

பிரிட்டன் வானிலை மையத்திலிருந்து கணிப்புகள் ஒவ்வொரு 12 மணி நேரங்களுக்கும் வெளியிடப்படுகிறது. இதில் ஒரு கணிப்பில் மழை பெய்யும் என்றும், அடுத்த கணிப்பில் மழை இல்லை என்றும் காண்பிக்கப்படுகிறது. ஒரு பதிவில் கனமழை என்பார்கள்; அடுத்த பதிவில் மிதமான மழை என்பார்கள்.

இப்படியாக வரும் புதன்கிழமை முதல் கனமழை (கடைசியாக சென்னையை அடித்து விளாசியதுபோல்) என்று காண்பித்தது; ஆனால் தற்போது மிதமான மழை என்றே காண்பிக்கிறது. எனவே நாம் ஏன் பீதி கிளப்பும் முடிவுகளுக்கு வர வேண்டும். இந்நிலையில் இவர்கள் தேவையில்லாமல் ட்விட்டரில் வானிலை எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். அனுபவமற்ற இவர்கள் லண்டனில் உட்கார்ந்து கொண்டு நம் உள்ளூர் வானிலை நிலவரம், வெள்ளத்துக்குப் பிறகான மக்களின் மனநிலை என்று எதுவும் அறியாமல் வானிலை முன்னெச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

அக்குவெதர் குறித்து நாம் பேசினால், அவர்கள் காட்டும் காரணங்கள் சரியானதே. ஆனால், அது சென்னைக்கு மட்டும் உரித்தான முன்னெச்சரிக்கை அல்ல. அவர்களால் மிதமான மழையை கணிக்க முடியவில்லை. 17மிமீ மழை என்று கூறுகின்றனர். ஆனால் இது அச்சுறுத்தும் மழையா? என்ற கேள்வி எழுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, மேலடுக்கு ஆதரவின்றி அதிக அளவில் வறண்ட காற்று நிலவி வருகிறது. எனவே மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மிதமான மழை பெய்யவே வாய்ப்புள்ளது.

நாம் மோசமானதைப் பார்த்துவிட்டோம், எனவே பிபிசி அல்லது அக்குவெதர் முன்னெச்சரிக்கைகள் பற்றி கவலைப்படாமல் நாம் நம் வேலையை கவனிப்போம்.

நம்மூர் ஊடகங்களும் இதற்கு பொறுப்பு. பிபிசி எச்சரிக்கைகளை இவர்கள் உடனடியாக வெளியிட்டு அப்பாவி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேனை பொறுத்தவரையில், தமிழ் இணைய உலகில் மிகவும் பிரபலமான வானிலை முன்னறிவிப்பு வலைப்பதிவர். சமீப நாட்களில் இவரது முன்னறிவிப்புகள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றன. தற்போதைய நிலையில், இவரது பக்கத்தை 53 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment