Wednesday, 9 December 2015

பள்ளிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:- மழை, வெள்ளத்தால் அதிக பாதிப்புக்கு ஆளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 


பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வெள்ள நீர் சூழ்ந்துள்ள பள்ளிகளில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகளுடன் இணைந்து வெள்ள நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு, பள்ளி வளாகம், வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகளைச் சுற்றி பிளிச்சிங் பவுடரைத் தெளிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள பொத்தான்கள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாமல் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும். மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்றும், மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்க வேண்டும். வெள்ள நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளில் முறையாகக் குப்பைத் தொட்டிகளை வைத்து குப்பைகள் அகற்றப்பட வேண்டும். சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் இருப்பதால், மாணவர்களை அதனருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட அறிவுரைகளை தலைமையாசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment