Tuesday, 23 August 2016

நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு: முதல்வருக்கு அரசுப் பணியாளர்கள் பாராட்டு



நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு: முதல்வருக்கு அரசுப் பணியாளர்கள் பாராட்டு

மாநில நல்லாசிரியர்களை கௌரவிப்பது குறித்து சில கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு சங்கம் சார்பில் கொண்டு சென்றதன் பேரில் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், அரசுப் பணியாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவருமான ஆ.காமராஜ் நன்றியும், பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:



அண்மையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சங்கம் சார்பில் நல்லாசிரியர்கள் விருது பெற்றவர்களை கௌரவிப்பது குறித்து கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. அம் மனுவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் ஆசிரியர்கள் தினத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்த ஆசிரியர்களிடம் மேலோங்கியுள்ளது.தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்று பணியில் உள்ளவர்களுக்கு ஓய்வு பெறும் வயதை இரு ஆண்டுகள் கூடுதலாக்க வேண்டும்.

மேலும் அவர்களின் பணி நிலைக்கு ஏற்ப ஒரு பதவி உயர்வு வழங்க வேண்டும். (இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி).  ஒரு ஊக்க ஊதியம் (இரு ஊதிய உயர்வு) வழங்க வேண்டும். அரசுப் பேருந்துகளில் தமிழகம் முழுவதும் குடும்பத்துடன் பணிக்க பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

இந்த ஆசிரியர்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு தமிழகத்தில் சுங்கச் சாவடிக் கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும். இதுபோன்ற அங்கீகாரங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்து தந்து நல்லாசிரியர் விருது பெற்றவர்களை மேலும் வாழ்நாள் முழுவதும் கௌரவிக்கும் வகையில் செய்ய வேண்டும்.

இதுபோன்ற அங்கீகாரத்தை நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு அளிப்பதால், அரசிற்கு மிக அதிகமான நிதிச் சுமை ஏதும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் குறைந்த அளவிலே இதுபோன்ற ஆசிரியர்கள் உள்ளார்கள் என்றும் அவர் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.இதன் அடிப்படையில் தற்போது தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் நல்லாசிரியர்களுக்கான பரிசுத் தொகை ரூ.5 ஆயிரம் என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ.10 ஆயிரம் என அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

மேலும் ஆசிரியர் தினத்தன்று குறிப்பிட்ட கோரிக்கைகள் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment