Tuesday, 23 August 2016

பள்ளிகளில் அமலாகிறது 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு



பள்ளிகளில் அமலாகிறது 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு

அரசு பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்குப்பிடி போட முடிவு செய்துவிட்டது தமிழக அரசு. அதற்கான அறிவிப்பையும் இன்று 110 விதியின் கீழ் வெளியிட்டுள்ளார் முதல்வர்.









தமிழகத்தில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் பேருந்து போகாத பல கிராமங்களில் கூட அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தோடு அரசு துவக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களும், நடுநிலைப்பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசியர்களும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.



அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பலர் நகர்ப்புற பகுதிகளில்தான் வசித்து வருகின்றனர். பெரும்பாலான துவக்கப்பள்ளிகள் கிராமப்பகுதிகளில் இருக்கும் நிலையில், நகர் பகுதியில் இருந்து ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிக்குச் சென்று வருவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பல கிராமங்களில் இருக்கும் தொடக்கப்பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக தான் இருக்கின்றன. இது பல ஆசிரியர்களுக்கு வசதியாகிவிட்டது. காலை ஓன்பது மணிக்கு பள்ளியில் இருக்கவேண்டிய ஆசிரியர்கள், பதினோரு மணிக்கு பள்ளிக்கு வரும் அவல நிலைகள் தமிழக கிராமங்களில் இன்றும் நிலவி வருகிறது.



அதே போல் இரண்டு ஆசிரியர் பணிபுரியும் பள்ளிகளிலும் இதே நிலை தான் உள்ளது. பெண்கள் ஆசிரியர்களாக இருந்தால், இந்த நிலை இன்னும் மோசமாக உள்ளது. குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வருவது என்பது பல அரசு ஆசிரியர்களிடம் வழக்கொழிந்த விஷயமாக மாறிவிட்டது. ஏற்கனவே அரசு பள்ளிகள் மீது மக்களுக்கு இருக்கும், அவநம்பிக்கையை இது மேலும் அதிகரிப்பதாக உள்ளது. தென் மாவட்டத்தில் கடைக்கோடியில் இருக்கும் பள்ளி ஒன்றிற்கு பாடவேளை துவங்குவதே காலை பன்னிரெண்டு மணிக்குதான். காரணம் அந்த பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கும் இரண்டு ஆசிரியர்களும் அருகில் இருக்கும் நகரத்தில் இருந்து வருகிறார்கள். அந்த கிராமத்திற்கு இரண்டு பேருந்துகள் மட்டுமே உள்ளன.



அதில் ஒரு பேருந்து அவர்கள் வசிக்கும் நகரில் எட்டு மணிக்கு புறப்பட்டு ஒன்பது மணிக்கு அந்த கிராமத்திற்கு வந்தடையும். அதை தவிர்த்து விட்டு பத்து மணி பேருந்தில் தான், இவர்கள் பள்ளிக்கு வருகின்றார்கள். இதனால் இந்த பள்ளியின் வேலை நேரம் பதினோரு மணிக்கு  மேல் தான் ஆரம்பிக்கிறது. ஆனால் தங்களது வருகை பதிவேட்டில் இவர்கள் ஒன்பது மணிக்கு வந்துவிட்டதாக கையெழுத்திடுகின்றார்கள். இதே நிலைதான் தமிழகத்தின் பல கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளின் நிலையாக உள்ளது. பல கிராமங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதை தவிரத்துவிட்டு, அந்த கிராமத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களை இவர்கள் குறைந்த ஊதியம் கொடுத்து ஆசிரியர்களாக இவர்களே நியமிக்கும் கொடுமைகள் எல்லாம் தமிழகத்தில் நடந்தேறி வருகிறது.



அரசுப் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வுகள் குறைந்து இருப்பதும், மாணவர்கள் குறைவாக இருப்பதும் இதுபோன்ற காலம்தாழ்த்தி வரும் ஆசிரியர்களுக்கு வசதியாகிவிட்டது. இது குறித்து தொடர்ந்து கல்வித் துறைக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தால், இதற்கு மாற்றுத் தீர்வு காண அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இன்று முதல்வர் உயர்கல்வி, மற்றும் பள்ளி கல்வி துறை குறித்து 110 விதியின் கீழ் இருபத்தி நான்கு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒரு அறிவிப்பில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கையாளுவதில் தற்போது உள்ள கையெழுத்திடும் முறையை மாற்றி, பயோமெட்ரிக் முறையில் வருகைபதிவு செய்யும் புதிய முறை கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக 45.57 கோடி ஒதுக்கபடுவதாக அறிவித்துள்ளார்.



பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யும் போது, குறித்த நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே போல் பள்ளி முடிந்து செல்லும்போது கைரேகையை வைத்து பதிவு செய்யும் நிலை இருப்பதால், நினைத்த நேரத்திற்கு பள்ளியை விட்டு கிளம்பவும் முடியாது. மேலும் வருகைநேரத்தை தாண்டி வருகைப்பதிவேட்டில்  பதிவு செய்தால், அவர்களது ஊதியம் குறையும் வாய்ப்பு இருப்பதால், கால தாமதத்தை இனி தொடர முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.



கிராமத்து தொடக்கப் பள்ளிகளிலும், இனி ஒன்பது மணிக்கே ஆசிரியர்கள், ஆஜர் ஆகிவிடுவார்கள்  என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment