மாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க ஏற்படுத்தப்பட்ட நடமாடும் ஆலோசனை மையங்கள் தற்போது விரிவுபடுத்தப்பட்டு முறையான சேவையைத் தொடங்க உள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு நேரில் சென்று ஆலோசனைகள் வழங்கித் தீர்வு காணும் வகையில், நடமாடும் ஆலோசனை மையம் (ம்ர்க்ஷண்ப்ங் ஸ்ரீர்ன்ய்ள்ங்ப்ப்ண்ய்ஞ் ஸ்ரீங்ய்ற்ழ்ங்) பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது.
பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்பு, சுற்றுப்புறச்சூழல், குடும்ப நிலை, இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனச் சோர்வு, மனக் குழப்பம், பாலியல் பிரச்னைகள், தேர்வு அச்சம், மதிப்பெண் நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தற்கொலை உள்ளிட்ட முரண்பாடான முடிவுகளை எடுப்பதும், உடல் மற்றும் மன ரீதியாக பாதித்து கல்வியைக் கைவிடும் நிலையும், தேர்வைப் புறக்கணிப்பதும், மதிப்பெண்களை இழப்பதும் நிகழ்கிறது.
10 மண்டலங்களில் சேவைத் தொடக்கம்: இந்தச் சூழலை மாற்றி, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்த, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகையில், நடமாடும் ஆலோசனை மையங்கள் 2013-14ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களை 10 மண்டலங்களாகப் பிரித்து, முதல் கட்டமாக 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் படிப்படியாகத் தொடங்கப்பட்டன.
டெம்போ டிராவலர் வேனில் எல்சிடி டிவி, ஒலிபெருக்கிகள், சிடி பிளேயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், உளவியல் ஆலோசகரும் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூரில் 2013-14-இல் இந்த நடமாடும் ஆலோசனை மையம் தொடங்கப்பட்டது. கடலூர் மண்டலத்துக்குள்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
உளவியல் ஆலோசகராக செந்தில் நியமிக்கப்பட்டு, அவர் கல்வித் துறை அதிகாரிகள் குறிப்பிடும் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் பிரச்னைகளுக்கு உளவியல் ரீதியாக, ஒளிப்படக் காட்சியுடன் ஆலோசனை வழங்கி வந்தார். குறிப்பாக 9-முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு ஏற்படும் குடும்பச் சூழல் நெருக்கடி, தேர்வு நேர அச்சம், மாணவர்களிடையே குழு மோதல் போன்ற இடையூறுகளால், அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுக்க, உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கப்படுவதுடன், உடல்பயிற்சி, சரிவிகித உணவு போன்ற உடல் ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மூன்று மாவட்டங்களுக்கு ஒரு சேவை மையம் என்பதால், அதிகளவில் இந்த சேவை மாணவர்களிடம் சேராத நிலை இருந்தது. பல மாவட்டங்களில் இதுகுறித்து வெளியே தெரியாமலும் போனது.
சேவை விரிவாக்கம்: நிகழாண்டில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு, கூடுதல் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதாவது, மேலும் 10 மண்டலங்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இதனால், 3 மாவட்டங்களுக்கு ஒரு மையம் என்பது குறைக்கப்பட்டு, 2 மாவட்டங்களுக்கு ஒரு மையம் என்ற வகையில் கூடுதல் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பெரிய கல்வி மாவட்டங்களான விழுப்புரம், வேலூர் மாவட்டங்களுக்கு தற்போது நடமாடும் ஆலோசனை மையத்துக்கான வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சா.மார்ஸிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்திலிருந்துதான் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டப் பள்ளிகளுக்கும் இந்த சேவை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களுக்கும் புதிதாக நடமாடும் ஆலோசனை மையத்துக்கான வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.இதற்காக, விரைவில் உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டு, நிகழ் கல்வியாண்டு முதல் ஆலோசனை மையம் இயங்கும் என்றார் அவர்.
ALL TRS TN.. Siva
No comments:
Post a Comment