வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு.பெயர் சேர்க்க ஒரு மாத அவகாசம்
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும் வரும் 1 ஆம் தேதி விண்ணப்பங்களை அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரி மாறி இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாக இப்போது புழக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வரும் வியாழக்கிழமை (செப். 1) முதல் வைக்கப்படுகிறது.
இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டும் தேர்தலில் வாக்களிக்க இயலாது. வாக்காளர் பட்டியலிலும் பெயர் இருப்பது அவசியம்.
எனவே, பட்டியலில் பெயர் சேர்க்கவும், அதில் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்கென இப்போது நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியல் வரைவு வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும்.
அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சிறப்பு முகாம்கள்: வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் (www.elections.tn.gov.in) காணலாம். மேலும், செப்டம்பர் 10, 24 ஆகிய தேதிகளில் கிராம சபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களிலும், பிரிவு வாரியாக படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.
இந்த வாக்காளர் பட்டியல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆகியோரின் அலுவலகங்களிலும், வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் வைக்கப்படும். சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்படும்.electoralservicesearch.azurewebsites.net என்ற இணையதள முகவரியிலும் பெயர்கலைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள உரிய மனுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களைப் பெற சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் செப்டம்பர் 11, 25 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment