வாட்ஸப்பின் பிரைவஸியை பறிக்கிறதா ஃபேஸ்புக்? என்ன செய்யலாம் நாம்?
கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக தனது Privacy policy-ஐ மாற்றியிருக்கிறது வாட்ஸ் அப். வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும், பயனாளிகளின் மொபைல் எண் மற்றும் அக்கவுன்ட் குறித்த தகவல்களை இனி தனது தலைமை நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக கடந்த 25-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது வாட்ஸ்அப். இதனை அடுத்து, வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இதுகுறித்த புதிய பிரைவசி பாலிசி மற்றும் நிபந்தனைகளை அனுப்பி, நமது மொபைல் எண்ணை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டும் வருகிறது.இதுகுறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
1.வாட்ஸ் அப்பை, 19 மில்லியன் டாலர்கள் கொடுத்து பேஸ்புக் நிறுவனம் வாங்கியது நாம் அனைவரும் அறிந்ததே! எனவே வாட்ஸ் அப் குறித்த முடிவுகளையும், அதன் parent company-யான பேஸ்புக்தான் எடுக்கும். குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவின் காரணமாக, பேஸ்புக்கில் இனி உங்களுக்கு மிகவும் தொடர்புள்ள, நீங்கள் விருப்பம் காட்டும் வணிக விளம்பரங்கள் வரவிருக்கின்றன. அவற்றை சந்திக்கத் தயாராக இருங்கள்!
2.நீங்கள் தாரளாமாக இந்த மொபைல் எண் பரிமாற்றத்தை தடுக்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, வாட்ஸ்அப்பை அன்-இன்ஸ்டால் செய்வது மட்டுமே! ஆம். இந்த புதிய நிபந்தனைக்கு நீங்கள் அனுமதி தரவில்லையெனில், இன்னும் 28 நாட்களுக்குப் பிறகு நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.
3.உங்களது மொபைல் எண்ணை பேஸ்புக்கிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளப் போவதாக வாட்ஸ்அப் மூலம், பேஸ்புக் அறிவித்துள்ளது. உங்கள் எண், விளம்பர நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்ளப்படாது எனக் கூறியுள்ளது.
4.பேஸ்புக்கின், தரத்தை மேம்படுத்தி உங்களுக்குத் தேவையான விளம்பரங்களை காட்டுவது, சரியான Friend suggestions கொடுப்பது போன்றவற்றிற்காக மட்டுமே, இந்த ‘ஷேரிங்’ என்கிறது வாட்ஸ்அப். அத்துடன் போலியான விளம்பரங்கள் நிச்சயம் வராது என உறுதியளித்துள்ளது.
5.அப்போ, இனி வாட்ஸ்அப்பிலும் விளம்பரம் வருமா என சந்தேகம் வரலாம். ஆனால் “இந்த முடிவு பேஸ்புக்கிற்காக மட்டுமே எடுக்கப்பட்டது. வழக்கம் போலவே வாட்ஸ் அப்பில் விளம்பரங்கள் காட்டப்படாது” என்கிறது அந்நிறுவனம்.
6.நமது பல பெர்சனல் தகவல்கள் வாட்ஸ்அப்பில்தான் இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் வாட்ஸ்அப் பகிர்ந்து கொள்ளாதாம். உங்களது வாட்ஸ்அப் மொபைல் எண், உங்கள் மொபைலின் OS விவரம் மற்றும் கடைசியாக வாட்ஸ்அப் பயன்படுத்திய விவரம் ஆகியவை மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. சொந்த விஷயங்கள் வழக்கம் போலவே யாராலும் பார்க்க முடியாத படி encrypt செய்யப்பட்டிருக்கும்.
7.வாட்ஸ் அப்பில் இருக்கும் நீங்கள், பேஸ்புக்கில் இல்லை என்றால் எந்த பிரச்னையும் இல்லை. உங்களை பேஸ்புக் இன்ஸ்டால் செய்யசொல்லி, வாட்ஸ்அப் கட்டாயப்படுத்தாது. ஆனால் ஒரே மொபைல் எண் கொடுத்து, இரண்டையும் ஒரே போனில் பயன்படுத்தி வந்தால், இரண்டும் தானாக இணைக்கப்பட்டு விடும்.
8.வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை.
9.இதை ஓரளவு தடுக்க, வாட்ஸ் அப்பிற்கென ஒரு மொபைல் நம்பரையும், ஃபேஸ்புக்கிற்கென மற்றொரு மொபைல் நம்பரையும் தர வேண்டும். இப்படி செய்யும் போது, அந்த மொபைல் நம்பரின் மூலம் எடுக்கப்படும் விவரங்கள், ஃபேஸ்புக்கிற்கு பயன்படாது.
சரி..நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? முதலில் உங்களுக்கு கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போன்ற செய்தி உங்கள் வாட்ஸ்அப்பில் காட்டப்படும். நீங்கள் உடனே ‘Agree’ கொடுத்துவிட்டால், உங்கள் தகவல்கள் பகிர்ந்து கொள்ள சம்மதம் சொல்லிவிட்டதாக அர்த்தம். ஏற்கனவே நீங்கள் ‘Agree’ கொடுத்திருந்தால் பிரச்னை இல்லை. மீண்டும் உங்கள் வாட்ஸ் அப்பை திறந்து, ‘settings’-ல் இருக்கும், ‘Account’ ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் காட்டப்படும் ‘Share my account info’ என்னும் ஆப்ஷனின் அருகில் இருக்கும் டிக் மார்க்கை எடுத்து விடுங்கள். இப்போதைக்கு உங்கள் அக்கவுன்ட் தகவல் பேஸ்புக்கிடம் பகிரப்படாமல் இருக்கும். இல்லை இந்த மொபைல் எண் பரிமாற்றம் உங்களுக்கு, வேண்டாம் என்றால் தற்போது விட்டுவிடுங்கள்.
ஆனால் இன்னும் 28 நாட்களுக்குள் இதே அறிவிப்பு மீண்டும் உங்களுக்கு காட்டப்பட்டு, வாட்ஸ் அப் உங்களிடம் அனுமதி கேட்கும். அப்போதும் நீங்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வில்லையெனில்... மேலே இருக்கும் 2-வது பாய்ன்ட்டை படிக்கவும்!அவ்வளவுதான்! வாட்ஸ் அப் பயன்படுத்துவதால் உங்கள் தகவல் பறிபோகும் என நினைத்தால் மற்ற உடனடி தகவல் ஆப்ஸ்களாக ஹைக், டெலிகிராம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment