ஆதார் அட்டை மூலம், உண்மை தகவல்கள் சரி பார்க்கப்படும் போது, முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், முகப்பதிவு அடையாள முறையை கட்டாயமாக்க, ஆதார் அடையாள அட்டை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது, செப்., 15 முதல் அமலுக்கு வருகிறது. 'இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறுவது, தண்டனைக்குரிய குற்றம்' என, அரசு அறிவித்துள்ளது.யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய அடையாள அட்டை ஆணையம், இந்திய குடிமக்கள் அனைவருக்கும், 12 இலக்கங்கள் உடைய, 'ஆதார்' அடையாள அட்டையை வழங்கி வருகிறது.
குற்றச்சாட்டுகள்
வங்கி கணக்குகள், பான் அட்டை, ஓய்வூதியம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், மொபைல் போன் சேவைகள், சமையல் காஸ் மானியம் உட்பட, பல்வேறு சேவைகளுக்கு, ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இந்த சேவைகளை பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட ஆதார் அட்டையின் உண்மை தன்மையை அறிய, அட்டை வைத்திருப்பவரின் விரல் ரேகை அல்லது கண்ணின் கருவிழிப் படலம் பரிசோதிக்கப்படுகிறது.இதில் உள்ள பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஆதார் அட்டை பயனாளரின் முகத்தை, புகைப்படம் மூலம் பதிவு செய்து சரி பார்க்கவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, அடையாள அட்டை ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, செய்தியாளர்களிடம் கூறியதாவது:மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான சேவைகளை பயன்படுத்தும்போது, ஆதார் அட்டையில் உள்ள விரல் ரேகையுடன் அவர்களது விரல் ரேகை, ஒத்துப்போவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.வயோதிகம் காரணமாகவும், விவசாயம் போன்ற வேலைகளில் ஈடுபடுவோரின் கைரேகைகளில் மாற்றம் ஏற்படுவதன் மூலமும், இந்த தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது.இது போன்ற நேரங்களில், சம்பந்தப்பட்டோர் முகப்பதிவு அடையாளத்தை சரி பார்ப்பதன் மூலம், தவறுகள் நடப்பதை தவிர்க்க முடியும்.
உத்தரவு
இந்த முகப்பதிவு அடையாளத்தை, முதல்கட்டமாக, மொபைல் போன், 'சிம்' கார்டுகள் வாங்குவோரிடம் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வரும், செப்., 15 முதல், புதிய சிம் கார்டுகள் வாங்க வருவோரிடம், கை ரேகை, கரு விழிப்படலம் பதிவு செய்யப்படுவதோடு, அவரது முகமும் பதிவு செய்து கொள்ளப்படும். பின், மூன்று தகவல்களும் சரிபார்க்கப்பட்டு, சிம் கார்டுகள் வழங்கப்படும்.ஒரு மாதத்தில் வழங்கப்படும் சிம் கார்டுகளில், குறைந்தபட்சம், 10 சதவீத சிம் கார்டுகள், முகப்பதிவு அடையாள சரிபார்ப்பு மூலம் வழங்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.முதலில், 10 சதவீதத்தில் தொடங்கி, குறைகள் சரி செய்யப்பட்ட பின், படிப்படியாக அதிகரிக்கப்படும். பின், மற்ற சேவைகளிலும் இந்த முகப்பதிவு அடையாள சரிபார்ப்பு நடைமுறைபடுத்தப்படும்.இதை கடைபிடிக்க தவறுவது, தண்டனைக்குரிய குற்றம். அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம், ஏற்கனவே ஆதார் அட்டை வழங்கும் நிறுவனத்திடம் உள்ளது. எனவே, அவர்களின் முக அடையாளத்தை ஒப்பிட்டு சரி பார்ப்பது, சுலபமாக இருக்கும்.மடிக்கணினி மற்றும் மொபைல் போன்களில், புகைப்படம் எடுக்கும் வசதி இருப்பதால், சேவை நிறுவனங்களுக்கு புதிதாக உபகரணங்கள் வாங்கி தரவேண்டிய அவசியமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
எங்கெங்கு பயன்படும்?
புதிய சிம் கார்டுகள் வாங்க, வங்கி, ரேஷன் கடை, அரசு அலுவலகங்களில் பணிபுரிவோரின் வருகை பதிவேடு பணிகள்* பல்வேறு சேவைகளுக்காக, ஆதார் அட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், முகப்பதிவு அடையாளம் சோதிக்கப்படும்* ஆதார் அட்டை வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பவர், பின், தாடி வளர்த்திருந்தாலோ, முடி நரைத்திருந்தாலோ, வழுக்கை விழுந்திருந்தாலோ கூட, சம்பந்தப்பட்ட நபரை, சரியாக அடையாளம் காணும் தொழில்நுட்பம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment