உண்மையில் என்ன தான் செய்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?*
என்ன தான் செய்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?*
பொதுவான பார்வையில்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றால்
அதிக சம்பளம் வாங்குபவர்கள்,
வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குபவர்கள்,
இன்னும் சிலவும்...
உண்மை நிலை என்பதும் இது தானா?
வாருங்கள், ஒரு ஆய்வு செய்து பார்ப்போம்...
பள்ளிக்கு அருகிலேயே இல்லமிருப்பவர்கள் இருந்தாலும், 100 கி.மீ முதல் 200 கி.மீ முதல் தினமும் பயணம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஓரிருவர் நேரம் தவறி பள்ளிக்குச் சென்றாலும் பெரும்பான்மையானோர் சரியான நேரத்தில் பள்ளிக்குச் சென்று, இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களை ஒழுங்குபட வரிசைகளில் நிற்க வைப்பதில் தொடங்குகிறது இவர்களின் வேலை...
பள்ளி வளாகத்தினுள்ளும், பள்ளி வகுப்பறைகளிலும் குப்பைகள் இல்லாதவாறு அவற்றை அப்புறப்படுத்தி 'தன்' பள்ளியெனும் எண்ணத்துடன் அந்த நாளினைத் தொடங்குகின்றனர்.
வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னரே அன்றைய நாளில் மாணவர்களுக்கு குடிநீர் இருப்பையும், கழிவறையில் நீர் இருப்பையும், அவர்களுக்கு சமையல் செய்யவும், சாப்பிட்ட பின் மாணவர்கள் கை கழுவவும் தண்ணீரின் இருப்பை கிடைக்குமாறு செய்து அந்த நாளை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமாறு உறுதி செய்துகொள்கின்றனர்.
இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் நிற்கும் போதே யார் குளித்தது, யார் தலை வாரியது, யார் பல் துலக்கியது, யார் நகம் வெட்டியது, யார் கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பது, யார் துவைக்காத அழுக்கான ஆடைகளை அணிந்திருப்பது எனவும் கண்காணித்து அவற்றை முறைப்படுத்தவும் செய்கின்றனர்.
வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவர்களின் மனநிலைகளையும், உடல்நிலைகளையும் அவர்கள் முகத்தினை வைத்தே தீர்மானிக்கின்றனர். நாம் நினைப்பது போல நம் வீட்டிலுள்ளது போலவே அந்த குழந்தைகளின் வீட்டிலும் நிலை உள்ளதாக நினைத்துக்கொள்ளக்கூடாது !
குடித்து விட்டு சண்டை போடும் தந்தை, வேலைக்கே செல்லாத தந்தை, தந்தையை நிம்மதியாய் இருக்கவிடாத தாய், தாய்-பாட்டி சண்டைகள், சில இடங்களில் நாகரீகமற்ற தவறான பழக்கம் கொண்ட சில தாய், தந்தையரும் உண்டு ! இதுவுமல்லாமல் மாடு மேய்த்துவிட்டும், ஆடு மேய்த்துவிட்டும், சுள்ளி பொறுக்கிவிட்டும், விறகு வெட்டிவிட்டும், சுமை சுமந்து பல தூரம் அதைக் கொண்டு சென்ற பின் பள்ளிக்கு வரும் மாணவர்களும் இன்னும் உள்ளனர்.
இப்படி பல்வேறு சூழல்களிலிருந்து வரும் குழந்தைகளை அவர்களின் முகத்தினை வைத்தே புரிந்துகொள்வதென்பது அந்த ஆசிரியர்களுக்கே உண்டான திறமை.
சில நேரங்களில் சில குழந்தைகள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே கிடப்பதும், அவர்களின் பெற்றோரும் அவற்றை கண்டுகொள்ளாமலிருப்பதும் அரங்கேறும்.
தனியார் பள்ளியிலிருந்து கட்டணக்கொள்ளையால் தன் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்த பெற்றோரின் மனசாட்சிக்குத் தெரியும், தனியார் பள்ளியில் தன் பிள்ளையை படிக்க வைத்தபோது பெற்றோருக்கு இருந்த அந்த கண்காணிப்பு என்பது அரசுப்பள்ளியில் சேர்த்தவுடன் மாயமாக ஆகிப்போகிறது. விலையில்லாமல் அளிக்கப்படும் எதற்குமே மதிப்பில்லை என்பது இங்கு மிகச்சரியாக பொருந்துகிறது.
அன்று பள்ளிக்கு வராத மாணவர்களை வர வைக்க, சில ஆசிரியர்கள் தொலைபேசி மூலமாகவும் அல்லது மாணவர்களிடம் விசாரித்தும் அந்த சரியான காரணத்தை உறுதி செய்துகொள்கின்றனர்.
பசியில் இருக்கும்போது காதுகள் கேட்காதென்பது யாவரும் அறிந்ததே, சில மாணவர்கள் தினமும் பசியோடே பள்ளிக்கு வருவர். அந்த பழக்கத்தினை மாற்றவும் தங்களால் ஆன முயற்சியினை மேற்கொள்கின்றனர்.
வகுப்பிற்கு முன்னரே கரும்பலகையில் தேதியையும், கிழமையையும் எழுதியவுடனேயே அங்ங்ங்கு தொடங்க்குகிறது பதிவேடுகளின் பங்களிப்பு.
சிலர் விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறிக்கொண்டதைப் போலவே இந்த பதிவேடுகளைக் கண்டு கவலையுறுகின்றனர்.
ஏன் அப்படி ஒரு கலக்கம் இந்த ஆசிரியர்களுக்கு?
ஆம். கலக்கமுறத்தான் செய்வார்கள். ஏனெனில் அவற்றின் எண்ணிக்கைகளும், அவற்றில் இடம்பெற வேண்டிய தகவல்களின் எண்ணிக்கையும் எக்கச்சக்கம்.
தோராயமாக பள்ளியிலும், வகுப்புகளிலும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் அறுபதைத் தாண்டும் என்பது சிலரின் கருத்து ! ! !
இத்தனையையும் தாண்டி வகுப்பு எடுக்கலாமென்றால் இந்த முறையில் தான் வகுப்பு எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. மாணவர்களின் இருப்பிட அமைவிடத்தைப் பொருத்தும், அவர்களின் மனநிலையையும், பழக்க வழக்கங்களைப் பொருத்தும் வாழ்வியல் முறைகளைப் பொருத்தும் அவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறைகள் பற்றியும் அக்குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே மிகச்சரியாக தெரியும். இது இடத்திற்கு இடம் மாறுபடும்.
அதையும் கடந்து வகுப்பு எடுக்க ஆரம்பித்து மாணவர்களின் மனநிலையை ஒருங்கிணைத்து எடுத்துக்கொண்டே இருக்கும் போதே, நூறு நாள் வேலைத் திட்டத்திலோ அல்லது வேறு ஏதேனும் வேலைக்குச் செல்லும் பெண்மணி ஒருவர் திடீரென நேராக வகுப்பினில் ''இந்தாடா, அம்மா வேலைக்கி போறன், பாப்பாவ புட்சிக்கோ '' என்று மொத்த மாணவர்களின் கவனத்தையும் ஒரேயொரு நொடியில் பஸ்பமாக்கி விட்டு சென்றுவிடுவார். அவர் நகர்ந்த அடுத்த நொடி அந்த குழந்தை எந்தளவு பீறிட்டு அழும் என்பதும், அதைச் சமாதானப்படுத்தி மீண்டும் வகுப்பில் மாணவர்களின் கவனத்தைக் கொண்டு வருவதென்பது அவ்வளவு சாதாரணமான செயல் அல்ல.
வீட்டில் வேலை இருந்ததாலும், பெற்றோரின் கவனமின்மையினாலும் சில/பல பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதாமலும், நடத்திய பாடத்தினை படிக்காமலும் திருதிருவென முழித்துக்கொண்டு அமர்ந்திருப்பர். இவர்களை எப்படி சமாளிப்பதென்றும் புரியாமலும், பெற்றோரை அழைத்து வர பல முறை சொல்லியனுப்பிய பின் நேரில் வரும் பெற்றோர்களிடத்தில் எதைச் சொன்னாலும், தன் பிள்ளை, அவன் கல்வி என்னும் எண்ணமேயில்லாமல் ஒரு பதில் வரும். இப்போது அந்த ஆசிரியர் திருதிருவென முழிப்பதை நம்மால் பார்க்க இயலும்.
சில மாணவர்களின் தவறான செயல்களுக்காக அவர்களைத் திட்டவோ, அடிக்கவோ அல்லது அவர்களின் மனம் நோகும்படியோ நடக்கக்கூடாதென்பது ஆணை. எந்தளவு உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமென நினைக்கிறீர்கள்? எனக்கெப்படி தெரியும்? நான் என்ன ஆசிரியரா? என்கிறீர்களா? குறைந்தபட்சம் ஐந்தே ஐந்து பிள்ளைகளை ஒரே அறையில் உங்களுடன் அமர வைத்து அவர்களின் கையில் புத்தகத்தைக் கொடுத்து டி.வியோ மொபைல் போனோ இல்லாமல், அவர்களுக்கு எந்தவித கண்டிப்பும் இன்றி அவர்களை படிக்கவும் வைத்து ஒரு நாளை கடத்திப் பார்த்தோமானால் நாம் யாரைப் பற்றி எவ்வளவு எளிதாக பேசிவிட்டோம் என்பதை நாம் உணர்ந்துவிடுவோம்.
இது இப்படியிருக்க, ஒரே அறையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் பல வகுப்பு மாணவர்களை வைத்துக் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அதே ஆசிரியர் ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்துவது என்பது, அதைப் பார்ப்பவர்களுக்கு சிரிப்பாகவும், அதைப் புரிபவர்க்கு சவாலாகவும் இருக்கும்.
காலை நேர வகுப்புகள் முடிந்தவுடன் மதிய உணவு இடைவேளைக்கு யார் கை கழுவாமலும், தட்டு கழுவாமலும் வருகிறார்கள் என்பதையும் ஒவ்வொருவராக கூர்ந்து கவனிக்கிறார்கள். இதைக்கூடவா கவனிக்க வேண்டும், நம்பும்படியாகவா உள்ளது எனக் கேட்பவர்கள் நிதர்சனம் புரியாதவர்கள் என்பதில் ஐயமேதுமில்லை. ஆம். அதைக்கூட கற்றுத்தராத பெற்றோரும் இருக்கவே செய்கின்றனர்.
உணவை மட்டுமே சுகாதாரமாக உண்ண சொல்லித் தருகிறார்களா? அல்ல. கழிவறைப் பயன்பாடும், கழிவறைச் சுத்தமும், கழிவறைகுச் சென்று வந்த பின் மாணவர்கள் கை, கால்களை சுத்தப்படுத்துவது முதல் இந்த ஆசிரியர்கள் சொல்லித்ததுகின்றனர் என்பதே நம்மை ஆச்சர்யப்படுத்தும் எதார்த்தம் !
நாமெல்லாம் லேப்டாப், ஸ்மார்ட் போன், LED TV என உயரப்பறந்துகொண்டிருக்கும் போது இவற்றையெல்லாம் நம்ப நமக்கு சற்று கடினமாகவே இருக்கும். இரட்டைத் தந்தையுடனோ அல்லது இரட்டைத் தாயுடனோ கூட சில குழந்தைகள் இருக்கலாம், அவர்களின் மனநிலையை சற்றே யோசித்துப் பார்த்தால் நமக்கு மனம் கலங்கவே செய்யும்.
சரி. எல்லாம் முடிந்து மீண்டும் மதிய வகுப்புகள் தொடங்கி கவனம் ஈர்க்கப்பட்ட நேரம் திடீரென வகுப்பினுள் நுழையும் உருவத்தை அனைவரும் திரும்பிப் பார்த்தால் அங்கு குடித்து விட்டு யாரோ ஒருவரின் தந்தை நின்றுகொண்டிருக்கலாம். எதற்க்குப் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், யார் முன் பேசுகிறோம் என தன் அரைகுறை ஆடையைப் பற்றிய கவலை கூட இல்லாதவொரு நபரை நாகரீகமான முறையில் மட்டுமே நடந்துகொண்டு பேச்சை வளர்க்காமல் வழியனுப்பி வைப்பதென்பது எந்தளவில் இயலும் என நாமும் ஒரேயொரு நிமிடம் அங்கு நின்று சிந்தித்துப் பார்த்தால் நமக்கு மிஞ்சுவது வெறும் பதில்களற்ற மௌனம் மட்டுமே.
மறுபடியும் வகுப்பெடுக்கத் தொடங்கி அதில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து பாடத்தை மனதில் பதிய வைப்பதென்பது நொடி நேரப் பெருந்தவம் !!!
இவற்றையெல்லாமும் கடந்து கல்வி கடந்து அந்த மாணவர்களை ஏட்டுச்சுரைக் காய்களைத் தாண்டி கறிக்கு உதவும் வண்ணம் அவனைத் தயார்ப் படுத்துவதுடன், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் இன்னும் பல்வேறு மதிக்கத்தக்க தலைவர்களின் பிறந்த நாட்களின் கொண்டாட்டங்களுக்கு அவர்களை தயார்ப்படுத்துதலும், பல சமயங்களில் நடைபெறும் கணினி பயன்பாட்டுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, சதுரங்கப்போட்டி, கபடி, கோ கோ என இன்னுமின்னும் எக்கச்சக்கமான போட்டிகளுக்கும் மாணவர்களை முழுமையாக இந்த ஆசிரியர்களே தயார்படுத்துகின்றனர்.
இவற்றினிடையில் கல்வித்துறையின் பல்வேறு பயிற்சிகளைப் பெறுவதும், அரசு தரும் விலையில்லாப் பொருட்களை பெற்று வழங்குவதும், ஊர்க்கணக்கெடுப்பு நடத்துவதும், அரசாங்கத்தின் தேசிய அளவிலான கணக்கெடுப்பு நடத்துவதும், கழிவறைகள் இல்லாத இடங்களிலும், யானை போன்ற காட்டு விலங்குகள் உலாவுமிடங்களில் தேர்தல் பணிகளைச் செவ்வணே செய்வதும் கூட இவர்கள் தான் என்பது நமக்கு இவர்களின் மேல் ஆச்சர்யமான மரியாதையையே ஏற்படுத்துகிறது.
''இந்தா இத எழுதி குடு வாத்யாரே" என அவர்கள் சாப்பிடும் நேரம் கூட அவர்களைச் சிலர் விட்டு வைப்பதில்லை. இதில் சாதிய, ஆண் பெண் பாகுபாடுகளில் சிக்கிக்கொள்ளாமலும், தன்னையும், தன் மாணவர்களுக்கும் பாதுகாத்துக்கொள்வதென்பதெல்லாம் கத்தியின் மேல் கால் ஊன்றி நடக்கும் வேலை !
வகுப்பறையில் ஆசிரியர்கள் தூங்கிக்கொண்டிருந்த காலமெல்லாம் போய், ஆசிரியர்கள் இமைக்க நேரமில்லா காலம் வந்ததை அரசியல் தெடர்பற்ற ஆய்வாளர்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்ளுவர்.
மேற்சொன்ன சவால்கள் அனைத்தும் ஆசிரியர்கள் சந்திப்பது என்று மட்டுமில்லை, ஆசிரியர்களின் மூலமாக அரசு சந்திப்பது. தனியார் பள்ளிகளின் ஆடம்பரங்களையும், கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் மீறி இன்றளவும் தன்னால் இயன்ற அளவு அரசுப்பள்ளிகள் வென்று கொண்டேதான் இருக்கின்றன. அந்த வெற்றிகள் விளம்பரப்படுத்தப்படுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை, வேண்டுமென்றே சில இடங்களில் மறைக்கவும் படுகிறது.
இதெல்லாம் காரணம் காட்டி மட்டும் அவர்கள் சம்பளம் வாங்கலாமா என்று இன்னும் சிலருக்கு ஐயம் இருக்கலாம். இதோ அதற்கான பதில்...
பல தனியார் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுகிறது, முழுமையாக. நசஷ்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளைக் கணக்கெடுத்துச் சொன்னால் ஒரு வேளை உங்களுக்கு அந்த உண்மை விளங்கலாம். பெற்றோர் கூட கண்டுகொள்ளாத வருங்காலச் சந்ததியின் பெரும்பகுதியை அரசு ஆசிரியர்களை வைத்து ஆழ்ந்த பொறுப்புடன் கவனித்துக்கொள்கிறது. இங்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுவதில்லை, வருங்கால சமூகத்தை திடமாக உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
ஆட்சிகள் மாறிக்கொண்டே தான் இருக்கும். அரசு என்பது அரசியல்வாதிகள் அல்ல. உள்ளார்ந்து பார்த்தோமானால் அரசு ஏழைகளுக்கானது, கவனிப்பற்றோருக்கானது, கல்வியற்றோருக்கானது. இவர்களையெல்லாம் மேல் கொண்டுவரும் அரசின் கருவிகள் மட்டுமே அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இவர்களின் சமூக சேவை மதிக்கப்படவில்லையெனும் சரி, நிச்சயம் நம்மால் மட்டுப்படுத்தப்படக்கூடாது.
மதிக்கப் பழகுவோம், அவர்களும் மனிதர்கள் தானே !
This article was,written by Mr. Arunmanohar, vellore.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Siva tams Ldr tpt blk.
No comments:
Post a Comment