காஸ் சிலிண்டரை இழந்தவர்களுக்கு விரைவில் மாற்று சிலிண்டர்: எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை
மழை வெள்ளத்தில் காஸ் சிலிண்டர்களை இழந்தவர்களுக்கு மாற்று சிலிண்டர் வழங்குவது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
சென்னையில் சமீபத்தில் கன மழை பெய்தபோது, பல வீடுகளில் இருந்த காஸ் சிலிண்டர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இவ்வாறு சிலிண்டர்களை இழந்தவர்களுக்கு மாற்று சிலிண்டர் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர் பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் கூறியதாவது:
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் தங்கள் வீடுகளில் பயன்படுத்தி வந்த சமையல் காஸ் சிலிண்டர்களை இழந்துள்ளனர். இவ்வாறு சிலிண்டரை இழந்தவர்களுக்கு மாற்று சிலிண்டர் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மாற்று சிலிண்டர்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசிடமும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இவ்வாறு மன்னூர் கூறினார்.
No comments:
Post a Comment