பத்தாம் வகுப்பு: ஜூலை 18-இல் அசல் மதிப்பெண் சான்றிதழ்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் திங்கள்கிழமை (ஜூலை 18) அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்த ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த ஜூன் 1-ஆம் தேதியன்று பள்ளிகள் மூலம் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தத் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை செல்லத்தக்கதாகும்.
எனினும் மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் திங்கள்கிழமை (ஜூலை 18) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும்.
தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment