அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த... திட்டம்!தேர்ச்சி சதவீதம் உயர்த்த கல்வித் துறை புதுமை
சிகரத்தை தொட்ட பல்துறை நிபுணர்களை அழைத்து வந்து, அரசுபள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.புதுச்சேரி அரசு பள்ளிகளில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள், திறமையான ஆசிரியர்கள் இருந்தபோதும், தேர்ச்சி என்று வரும்போது பின்னடவு ஏற்படுகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளி மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர்.அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தற்போதுபள்ளி கல்வித் துறை பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, இலக்கு இல்லாமல் வகுப்பறைகளில் உட்காந்திருக்கும் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு, சிகரத்தை தொட்ட பல்துறை நிபுணர்களை அழைத்து வந்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் ஊக்கப்படுத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, இத்திட்டம் ஓரிரு வாரங்களில், புதுச்சேரி அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இது தொடர்பாக அனைத்து அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு, வழிகாட்டுதல் நெறிமுறைகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி
அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் பல்துறை சிறப்பு நிபுணர்களை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்து குறிப்பிட்ட தேதியில் அழைத்து கொள்ளலாம்.
நான்கு பிராந்தியங்களில் உள்ள உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் காலை வேளையில் மட்டும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற வேண்டும்.
மாணவர்களின் பொறுமையை சோதிக்க வைக்காமல், முதல் 25 நிமிடங்கள் சிறப்பு நிபுணரின் உரையாகவும், அடுத்த 35 நிமிடங்கள் மாணவர்களின் சந்தேகங்களை போக்கும் கலந்துரையாடலாகவும் கட்டாயம் அமைய வேண்டும்.
கலந்துரையாடல் நிகழ்வு 35 நிமிடங்களில், கதை சொல்லல், வினாடி வினா, செயல்முறைகள், வீடியோ வெளியீடு, திரைகாட்சிகள் ஒளிபரப்பு என்ற முறையில் பவர் பாயின்டாககூட அமையலாம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசியம், வளர்ச்சி, நல்ல நிர்வாகம் வாழ்வியல் நெறிமுறைகள், நற்சிந்தனைகள் உள்ளிட்ட தலைப்புகளில் பேசலாம்.
சிறப்பு விருந்தினரின் பேச்சு, மதம், அரசியலை கடந்ததாக, அரசு நிர்வாகத்தை விமர்சிக்காமல் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
இதற்காக எந்த கட்டணமும் சிறப்பு விருந்தினர்களுக்குகிடையாது. தன்னார்வலராக இருந்து மாணவர்களுக்கு வழிகாட்டவே முடியும்.
இத்திட்டத்தின் கீழ், வாழ்வில் முன்னேறிய டாக்டர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.இருப்பினும், அரசு பள்ளிகள் வேறு திட்டத்தில் இறங்கியுள்ளன. அரசு பள்ளியில் படித்த பலர் வாழ்வில் சிகரத்தை தொட்டு நல்ல நிலையில் உள்ளனர். இவர்கள், பல்வேறு துறைகளில் உயர் பதவிகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.அதுபோன்ற புகழ் பெற்ற பிரமுகர்களை அடையாளம் கண்டு, அதே பள்ளியில் கலந்துரையாட வைப்பதே மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும் என, கருதி, பெரும்பாலான அரசுபள்ளிகள், அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன.
No comments:
Post a Comment