கணினி ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாணவர்கள்
தமிழகத்தில் 2011ம் ஆண்டு சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வந்தபோது அதில் கணினி பாடத்திட்டமும் சேர்க்கப்பட்டிருந்தது. அதற்காக 6 முதல் 10ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆனால் அந்த பாடத்திட்டத்தை முழுவதும் ரத்து செய்துவிட்டு புத்தகத்தை வழங்கவில்லை என கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் தனியார் பள்ளிகள் கணினி பயிற்சி அளிக்கிறோம் என்பதை தங்களது சிறப்பம்சமாக எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துகின்றனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1992 முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் கணினி அறிவியல் படிப்பு அறிமுகமானது. கணினி பற்றிய அடிப்படை தகவல்களை மட்டும் அறிந்தோர், பட்டப்படிப்பு படிக்காவிட்டாலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் கணினி படிப்பு முடிக்காதோர் கடந்த 2008ல் நீக்கப்பட்டனர்.பல்கலை.களில் 1992 முதல், கணினி அறிவியல் பாடத்தில் பிஎஸ்சிக்கு பிறகு பிஎட் படிப்புகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் பல ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருந்தும் பணி வாய்ப்புகள் வழங்கவில்லை. ஆன்லைன் படிப்புக்கும் ஐசிடி எனப்படும்கணினி வழி தொழில்நுட்ப கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் தமிழக அரசு அதிகாரிகள் மெத்தனத்தால் ஐசிடி கல்வி படிப்பில் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே இல்லாமல், மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும் ஏன் தமிழக அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரசு பள்ளிகளில் கணினி பாடத்தை மற்ற பாட ஆசிரியர்களே நடத்தி வருகின்றனர்.சில பள்ளிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர். ஆனால் அவர்கள் நடத்தும் பாடம் புரியாமல் மாணவர்கள் பரிதவித்துவருகின்றனர். உலகமே கணினிமயமாக மாறி வரும் காலக்கட்டத்தில் கணினியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகம் கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால் பல பள்ளிகளில் கணினி ஆசிரியர் இல்லாமலும், அல்லது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததாலும் மாணவர்கள் கணினி பாடத்தை படிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். அதேபோல் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவரவில்லை. வேலூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் கணினி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இது கணினி அறிவியலின் ஆர்வம்தான். ஆனால் மாணவர்கள் கணினிஅறிவியல் பாடத்தில் சேர்ந்தவுடன், இந்த பாடத்தில் ஏன் சேர்ந்தோம் என்று வேதனைபடுகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் கணினி ஆசிரியர்கள் இல்லாதது தான். சில பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாததால் பிளஸ் 1 வகுப்பில் கணினி பாடப்பிரிவையே ரத்து செய்து விடுகின்றனர். இதனால் மாணவர்கள் கல்விதான் பாதிக்கிறது. தற்போது அதிவேகமாக வளர்ந்து வருகிறது தொழில்நுட்பம். ஆனால் அரசு பள்ளி மாணவர்களிடையே பள்ளிக் கல்வித்துறை கணினி அறிவியல் பாடத்தை கற்பிக்காமல் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. பொதுவாக கணினி அறிவியல் பாடத்திற்கு, தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ என்ற அச்சம் கணினி ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கணினி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்த பொதுத்தேர்வு மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுஒருபுறமிருக்க அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கிளாஸ், ஆன்லைன் வகுப்புகள், என அரசு பள்ளிகளில் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.ஆனால் ஆன்லைன் வகுப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கணினி ஆசிரியர்கள் இல்லாததது பெற்றோர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புக்கான கட்டிடப்பணிகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டிடப்பணிகள் முடிவடைவதற்குள்அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம்தருவதில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி காலி பணியிடங்களை கணக்கெடுத்து கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.39,019 பேர் காத்திருப்புதமிழகத்தில் 1992ம் ஆண்டிலிருந்து கணினி பட்டதாரிகளில் ஆண்கள் 9,579 பேர், பெண்கள் 29,440 பேர் உட்பட 39,019 பேர் பிஎட் கணினி அறிவியல் பாடத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் படித்து வீட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். இதுவரை அவர்களுக்கு வேலை வழங்கவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வையும் எழுத அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!