21 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினிகள்: தணிக்கை அறிக்கையில் தகவல்
தமிழகத்தில் 2011-15 காலக்கட்டத்தில் ரூ.3,231 கோடியில் 21,29,196 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி, வருவாய், பொது-சமூகப் பிரிவு என தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கணக்காய்வு, தணிக்கை குறித்த அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பொது-சமூகப் பிரிவு கணக்காய்வு, தணிக்கை அறிக்கையில் மடிக் கணினி விநியோகம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் விவரம்:-
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ""விலையில்லா மடிக் கணினிகள் வழங்குதல்'' எனும் திட்டத்தை ஜூன் 2011-இல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டதா, மடிக் கணினிகளைப் பயன்படுத்த போதுமான ஆதரவு சேவைகள் அளிக்கப்பட்டனவா என்பதை மதிப்பீடு செய்ய கடந்த ஆண்டு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 21,90,683 மடிக்கணினிகளில் 21,69,196 மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட்டதுபோக, 21,487 மடிக்கணினிகள் மாவட்டங்களின் வசம் உள்ளன.
கல்வி ஆண்டு முடிந்த பின்னர்...தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துக்கு ("எல்காட்') நிதிகள் தாமதமாக விடுவிக்கப்பட்டதால், மாணவர்களுக்கு மடிக் கணினிகள் கல்வி ஆண்டு முடிந்த பின்னரே விநியோகிக்கப்பட்டன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதி படிப்புப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்களாக இருந்தும் மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.
பள்ளிகள், கல்லூரிகளில் நடந்த மடிக் கணினிகள் திருட்டு காரணமாக ஏற்பட்ட இழப்பு, மடிக்கணினிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் இருந்த குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறது என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment