பணி நிரவலில் முறைகேடு: அதிருப்தியில் ஆசிரியர்கள்
திருவள்ளூர் மவாட்டத்தில், கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த பணி நிரவல் கலந்தாய்வில் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றதாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கடந்த மாதம் 27, 28 }ஆம் தேதிகளில் நடைபெற்றது.
திருவள்ளூரில் முகமது அலி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில், பல்வேறு குழப்பங்களுடன் கலந்தாய்வு நடந்து முடிந்ததாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:
சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்குமாறு 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று மாலை 4.30 மணி வரை தகவல் தெரிவிக்கப்படாததால், சிலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். சிலருக்கு செல்லிடப்பேசியில் தொடர்பு கிடைக்காததால், தகவல் தெரிவிக்க முடியவில்லை.
இதற்கான கடிதமும் முறைப்படி வழங்கப்படவில்லை. இருப்பினும், தகவலறிந்த ஆசிரியர்கள் சனிக்கிழமை காலை அங்கு வந்தனர்.
இதில், பாட வாரியாக கலந்தாய்வில், ஒரு பாடத்துக்கு அரை மணி நேரம் வீதம் ஒதுக்கப்பட்டு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
பள்ளிகள் அமைந்திருக்கும் இடம், பல ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து அறிந்து கொள்ளவும், கலந்தாலோசிக்கவும் நேரம் வழங்கப்படவில்லை.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அளித்திருந்த புள்ளிவிவரங்கள் பெரும்பாலானவை தவறாக இருந்தன.
பணியில் சேர்ந்த தேதி, தற்போது பணிபுரியும் பள்ளியில் சேர்ந்த தேதி வெவ்வேறாக இருந்தும், பணியில் சேர்ந்த தேதியை தற்போது பள்ளியில் சேர்ந்த தேதியாக தவறுதலாக தலைமை ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். மாற்றுத் திறனாளிகள் குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை.
இந்த பணி நிரவலில் வெளியகரம், வெள்ளியூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, போரூர், திருமுல்லைவாயல், பொதட்டூர்பேட்டை, திருவாலங்காடு, பாண்டேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், செல்வாக்குள்ள சில ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணைகளை ரத்து செய்துகொண்டு, தேவையான பள்ளிக்கு மாற்றுவதற்கான ஆணையை திங்கள்கிழமை வாங்கிச் சென்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, கல்வித் துறை அதிகாரிகள் இக்கலந்தாய்வு குறித்து உரிய விசாரணை நடத்தி மீண்டும் பணி நிரவலை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment