பேஸ்புக்’கில் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் கொள்கை: ‘வாட்ஸ்அப்’ உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படாது டெல்லி ஐகோர்ட்டில் ‘வாட்ஸ்அப்’ விளக்கம்!!!
சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ நிறுவனம், ‘வாட்ஸ்அப்’பை விலைக்கு வாங்கி உள்ளது. அதையடுத்து, கடந்த மாதம் 25–ந் தேதி, வாட்ஸ்அப் நிறுவனம் புதிய கொள்கை ஒன்றை அறிவித்தது. ‘வாட்ஸ்அப்’பில் அதன்
உறுப்பினர்கள் வெளியிடும் தகவல்கள், பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் என்பதே அந்த கொள்கை. இதை ஏற்காதவர்கள், செப்டம்பர் 25–ந் தேதிக்குள் அக்கொள்கையில் இருந்து விலகலாம் என்றும் வாட்ஸ்அப் அறிவித்தது.இதை எதிர்த்து, கர்மன்யா சிங் சரீன், ஸ்ரேயா சேத்தி ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த கொள்கையால் தங்களது அந்தரங்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், எனவே, தகவல்களை பகிர்ந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி இருந்தனர்.இந்த மனு, தலைமை நீதிபதி ஜி.ரோகிணி, நீதிபதி சங்கீதா திங்க்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு ‘வாட்ஸ்அப்’ தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நாங்கள் பயன்படுத்தும் குறியீடுகளால், செய்தியை பெறுபவர் மட்டுமே அதை படிக்க முடியும். மூன்றாம் நபர் யாரும் படிக்க முடியாது. ஒருவர் தனது வாட்ஸ்அப் கணக்கை ரத்து செய்து விட்டால், அவரது ‘டெலிவரி’ செய்யப்படாத தகவல்களும் எங்கள் சர்வரில் இருந்து நீக்கப்பட்டு விடும்’ என்று கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ்அப் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா கூறியதாவது:–வாட்ஸ்அப்பின் புதிய கொள்கையால், உறுப்பினர்களின் அந்தரங்கத்துக்கு எவ்வித ஊறும் ஏற்படாது. அவர்கள் அனுப்பும் தகவல்களை மூன்றாம் நபர் யாரும் படிக்க முடியாது. இந்த கொள்கையை ஏற்க விரும்பாமல் விலகியவர்களின் எந்த தகவலும் பகிர்ந்து கொள்ளப்படாது. அவர்கள் வாட்ஸ்அப் கணக்கை ரத்து செய்துவிட்டால், அவர்களின் ‘டெலிவரி’ செய்யப்படாத தகவல்களை சர்வரில் இருந்து நீக்கி விடுவோம். எதையும் வைத்துக்கொள்ள மாட்டோம்.ஒருவர் அனுப்பும் தகவல், அதைப் பெறுபவருக்கு ‘டெலிவரி’ ஆனவுடன், அது நீக்கப்பட்டு விடும். ‘டெலிவரி’ ஆகாமல் இருந்தால், 30 நாட்கள்வரை சர்வரில் இருக்கும். அதன்பிறகும் ‘டெலிவரி’ ஆகாவிட்டால், நீக்கப்பட்டு விடும்.இவ்வாறு அவர் கூறினார்.அதையடுத்து, இவ்வழக்கில், நாளை (வெள்ளிக்கிழமை) உரிய உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment