Powered By Blogger

Sunday, 6 December 2015

வகுப்பறை நடைமுறை மாறுமா? "கலகல' திட்டம்! கற்பித்தலில் மாற்றம்

வகுப்பறை நடைமுறை மாறுமா? "கலகல' திட்டம்! கற்பித்தலில் மாற்றம் எதிர்பார்ப்பு
மாணவர்களிடம் கல்வியை திணிக்காமல், "கலகல' வகுப்பறையாக மாற்றி, பாடம் கற்பிக்கும் எளிய முயற்சியை, திருப்பூர் பள்ளிகளில் கல்வித்துறை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது. பொதுத்தேர்வை இலக்காக வைத்து, அதிக மதிப்பெண் பெறும் "பந்தய குதிரை'களாக மாணவர்களை தயார்படுத்துவது, அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளில் மட்டுமே இருந்த இந்நிலை, தற்போது, அரசு பள்ளிகளிலும் தொடர்கிறது. கல்வித்துறைக்கு ஆண்டுதோறும், 18 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கி,
நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்துகிறது. அதற்கு நன்றி கடனாக (!), 100 சதவீத தேர்ச்சி என்ற இலக்கை எட்ட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டும் வகையில், கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்தே, மாணவ - மாணவியரை தயார் செய்யவும், ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, "அனைவரும் தேர்ச்சி' முறையில், அடுத்தடுத்த வகுப்புக்கு அனுப்புவதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சந்திக்கும்போது, சில மாணவர்கள், தாய்மொழியான தமிழில் கூட, பிழையின்றி எழுதத் தெரியாமல் திண்டாடுகின்றனர்.
இத்தகைய மாணவர்களை, பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வைப்பது, வகுப்பு ஆசிரியர்களுக்கு "குதிரை கொம்பாக' உள்ளது. இதன் எதிரொலியாக, படிப்பில் பின்தங்கிய மாணவர்களை, ஒன்பதாம் வகுப்பிலேயே "வடிகட்டி' வெளியேற்றும் நடவடிக்கையை, சில பள்ளிகள் சத்தமின்றி செய்து வருகின்றன.
மூச்சு முட்டும் அளவுக்கு கல்வியை திணிக்கும் இடமாக, வகுப்பறையில் மாறுவதை தடுக்க, "கலகல' வகுப்பறை என்ற புதிய திட்டத்தை, மதுரையை சேர்ந்த தமிழாசிரியர் சிவா உருவாக்கியுள்ளார். மாநிலம் முழுவதிலும் இருந்து, ஆர்வமுள்ள, 30 ஆசிரியர்கள், அவரது பயிலரங்கில் பங்கேற்று திரும்பியுள்ளனர்.

மாநகராட்சி பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "வகுப்பறையை கலகலப்பாக மாற்றி, மாணவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே, இப்பயிற்சி நோக்கம். பாடல் பாடுதல், நாடகம், நடனம், ஓவியம் வரைதல், தப்பாட்டம், ஒயிலாட்டம், கதை சொல்தல் என, பன்முக திறன்களை வெளிப்படுத்தும் விதமாக, வகுப்பறைகளை மாற்றுவதன் மூலம், மாணவர்களை உற்சாகப்படுத்த முடியும். மதுரையை சேர்ந்த சில ஆசிரியர்கள், "கலகல' வகுப்பறை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இம்முயற்சியால், மாணவ - மாணவியர் இடையே, கல்வி கற்பித்தலில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்த முடியும்' என்றார்.

No comments:

Post a Comment