Powered By Blogger

Saturday, 2 January 2016

ALL TRS TN: ரூ.50,000-க்கும் மேல் பணப்பரிவர்த்தனை: "பான்' எண் இன்று முதல் கட்டாயம்

ரூ.50,000-க்கும் மேல் பணப்பரிவர்த்தனை: "பான்' எண் இன்று முதல் கட்டாயம்
ரூ.50,000-த்துக்கும் மேல் பணப்பரிவர்த்தனை செய்யும்போது பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய உத்தரவு வெள்ளிக்கிழமை (ஜன.1) முதல் அமலுக்கு வருகிறது.
 இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

 கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒருகட்டமாக, 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக பணப்பரிவர்த்தனை செய்யும்போது பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
 அரசின் இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை (ஜன.1) முதல் அமலுக்கு வருகிறது.
 இதன்படி, ரூ.50,000-த்துக்கும் அதிகமாக ஹோட்டலில் ரசீது கட்டினாலோ அல்லது வெளிநாட்டுப் பயணத்துக்கு கட்டணம் செலுத்தினாலோ வெள்ளிக்கிழமை முதல் பான் எண் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
 ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் நகை வாங்குவது உள்ளிட்ட அனைத்து பணப்பரிவர்த்தனைகள், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் அசையா சொத்துகளை வாங்குவது போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கும் பான் எண் கட்டாயம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் அசையா சொத்துகளை வாங்கும்போது பான் எண் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
 அந்த தொகை தற்போது ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
 இதேபோல், வங்கிகள், தபால் அலுவலகங்கள், வங்கி சாராத நிதி நிறுவனங்களில் ஒரே தவணையில் ரூ.50,000-த்துக்கும் அதிகமாகவோ அல்லது ஒராண்டில் ரூ. 5 லட்சமோ முதலீடு செய்யும்பட்சத்தில் அதற்கும் இனிமேல் பான் எண் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பான் அட்டை இல்லாதவர்கள் தவறான தகவல் அளித்தால் கடுங்காவல்
 பான் அட்டை இல்லாதவர்கள், ரூ.50,000-த்துக்கும் மேல் பணப்பரிவர்த்தனை செய்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் தவறானவை என்பது தெரிய வந்தால் அவர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தில்லியில் வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 வருமான வரித்துறை கொண்டு வந்துள்ள புதிய நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பான் அட்டை இல்லாதோர், குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்கையில், 60ஆவது எண் படிவத்தை கட்டாயம் நிரப்பி அளிக்க வேண்டும். அத்துடன், தனது அடையாள அட்டை, முகவரிச் சான்றுகளையும் இணைக்க வேண்டும். இவ்வாறு அளிக்கப்படும் விவரங்களில் தவறு இருப்பது தெரிந்தால், அத்தகைய நபர்களுக்கு அதிகபட்சமாக அபராதத்துடன் 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனைஅல்லது குறைந்தபட்சம் 3 மாத கடுங்காவல் சிறையுடன் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment