பாடத்திட்டம் திடீர் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி
உயர் படிப்புக்கான உதவித்தொகை தரும், தேசிய வருவாய் வழி தேர்விற்கு, 15 நாட்களே உள்ள நிலையில், திடீரென பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்பர்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாதந்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு, ஜன., 23ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது; மூன்று லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கு இன்னும், 15 நாட்களே உள்ள நிலையில், அரசு தேர்வுத்துறையின் புதிய அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேசிய வருவாய் வழி தேர்வுக்கு, எட்டாம் வகுப்பு பாடங்கள் முழுமையும் பாடத்திட்டமாக வைக்கப்பட்டு, அதிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும். இம்முறையும் அதே பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால், திடீரென தற்போது அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பில், முதல் இரண்டு பருவ பாடங்களையும், ஏழாம் வகுப்பில் அனைத்து பருவ பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும்.
இதன் அடிப்படையிலேயே வினாத்தாள் அமையும். இதை, திருத்திய அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
தேர்வு துறையின் அறிவிப்பு, வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. இரண்டு வாரங்களே மீதமுள்ள நிலையில், திடீரென, 'ஏழாம் வகுப்பின் ஓராண்டு பாடத்தையும் படியுங்கள்' என, மாணவர்களை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும். இந்த
அறிவிப்பு, விதிகளை மீறுவதாக உள்ளது.எந்த ஒரு தேர்வுக்கும், விண்ணப்பிக்கும் முன் அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். விண்ணப்பித்த பின் அறிவிக்கையை மாற்ற, சட்டத்தில் இடமில்லை.- ஆசிரியர்கள்
இளம் வயது மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல், இந்த அறிவிப்பு உள்ளது. ஏற்கனவே, அரையாண்டு தேர்வையும் வைத்துக் கொண்டு, உதவித்தொகைக்கான தேர்வையும்
அறிவித்ததால், இரண்டு தேர்வுக்கும் தயாராக முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.இதில் திடீரென, 'கடந்த ஆண்டு பாடங்களை படியுங்கள்' என்பது என்ன நியாயம்; மாணவர்கள் ஓராண்டில் படிக்க வேண்டியதை இரண்டு வாரங்களில் படிக்க முடியுமா?- பெற்றோர்
No comments:
Post a Comment