TNTET: 4 ஆண்டுகள் பணியாற்றி வருபவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கல்வித்துறை இயக்குனரிடம் மனு
நிபந்தனையின் அடிப்படையில் நிரந்தர பணியிடத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றி வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர் கருப்பசாமி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 2 ஆசிரியர்கள் வீதம் 50 பேர் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், இணை இய்ககுனர் கருப்பசாமி ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனுவில், “பணி நியமனம் பெற்ற நாளில் இருந்து ஆசிரியர் தகுதி காண் பருவமான 2 ஆண்டுகளையும் முறையாக நிறைவு செய்து விட்டோம். எங்களிடம் படித்த மாணவர்கள் 10ம் வகுப்பு அரசுத்தேர்வில் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றும், சிலர் மாநில,மாவட்ட அளவில் தரம் பெற்றும் உள்ளனர். அங்கீகாரம் பெற்ற பள்ளி குழுவின் நேர்முகத்தேர்வு, இனச்சுழற்சி முறை கடைப்பிடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முறையாக தேர்வு பெற்று, பள்ளி கல்வித்துறையின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற போது நிரந்தர பணியிடத்தில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறோம். ஆனால் அவரது ஆட்சிக்காலத்திலேயே எங்களது பணிக்கு ஆபத்து உருவாகி உள்ளதை எண்ணி மிகுந்த வேதனையும், மனஉளைச்சலும் அடைகிறோம்.
மொத்தத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் வாழ்வா, சாவா என்ற வாழ்க்கை போராட்டத்துடன் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறோம்.நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைபேரிடர் மற்றும் குடும்ப சூழல் என தற்போதைய ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கும் நாங்கள் தேர்வு எழுதக்கூடிய மனநிலையில் தற்போது இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
எனவே, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுதித்தேர்வை எழுதுவதில் இருந்து ஓர் தவிர்ப்பு ஆணை மூலம் எங்களை விடுவித்து உதவ வேண்டும். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட, பள்ளி கல்வித்துறை மூலம் தக்க பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment