திருவள்ளுவர் பிறந்த நாள் தேசிய விடுமுறை ஆகுமா?
தேசிய விடுமுறை ஆகுமா?
''திருவள்ளுவர் பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்,'' என, தருண்விஜய் எம்.பி., கூறினார்.உலகத் திருக்குறள் பேரவை சார்பில், மூன்றாவது திருக்குறள் மாநாடு, வேலுார் அடுத்த ரத்தினகிரியில் நேற்று நடந்தது. திருக்குறள் பேரவை தலைவர், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார்.
திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி, தருண்விஜய் எம்.பி., பேசியதாவது:
திருக்குறளை பிராந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்க வேண்டும். ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்கு திருக்குறள் பேரவை துவங்கப்படும். அனைத்து பகுதியில் உள்ளவர்களும் திருவள்ளுவர், திருக்குறள் குறித்து தெரிந்து கொள்ள, திருக்குறள் பரப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில், 25 கோடி பேரை உறுப்பினராக சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
பஞ்சாப் மாநிலத்தில், அரசு பள்ளிகளில் பாட திட்டத்தில் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாகமத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழக அரசு இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் இருந்து ஹரித்துவாருக்கு, திருக்குறள் கருத்துக்களை பரப்ப, புனித பயணம் பொங்கல் அன்று மஹாபலிபுரத்தில் இருந்து துவங்கப்படும். திருக்குறளைப் போல் மணிமேகலை, சிலப்பதிகாரம், கம்ப ராமாயணத்தை நாடு முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment