பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் பேரணியாக சென்றனர்.
பணி நிரந்தரம்...
அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், முழு பணி நேர பணியுடன் ஊதியம் ரூ.15 ஆயிரத்துக்கு குறையாமல் வழங்கவேண்டும், அரசு ஊழியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற ஆவண செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று கவன ஈர்ப்பு பேரணி நடந்தது.
எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணி, புதுப்பேட்டை தெற்கு கூவம் ஆற்று சாலை, லாங்க்ஸ் தோட்டச்சாலை வழியாக எழும்பூர் காந்தி-இர்வின் சாலை சந்திப்பை அடைந்தது. பேரணியில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் பகுதி நேர ஆசிரியர்கள் பங்கேற்றனர். காந்தி-இர்வின் சாலை சந்திப்பில் பகுதி நேர ஆசிரியர்கள் அமர்ந்தவாறு கோஷம் எழுப்பினர். ஜெயலலிதா நிறைவேற்றி தரவேண்டும் இதையடுத்து தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் சேசுராசு, மாநில மகளிரணி தலைவி கீதா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் பள்ளி கல்வித்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோரை சந்தித்து தங்களுடைய மனுவை கொடுப்பதற்காக தலைமைச் செயலகத்துக்கு சென்றனர். பேரணியில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற பகுதிநேர ஆசிரியர்கள் கூறுகையில், “ தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் என்பதை பிரதானமாக கொண்ட எங்களது கோரிக்கையை தாயுள்ளத்தோடு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி தரவேண்டும் என்பதற்காக கவன ஈர்ப்பு பேரணி நடத்தினோம். எங்களது கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்றி எங்களுடைய வாழ்வில் ஒளி ஏற்றவேண்டும்” என்றனர்.
No comments:
Post a Comment