ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வி அமைச்சர் உத்தரவு.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் உத்தரவிட்டுள்ளார். தொடக்கக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் தலைமையில் சென்னை டிபிஐ வளாகத்தில் நடந்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா முன்னிலை வகித்தார்.  தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன், அனைவருக்கும் கல்வி திட்ட மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் ராகுல்நாத், மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா நலத்திட்டங்கள், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு, ஆங்கில வழிப் பிரிவு தொடங்கப்பட்ட பள்ளிகள், அதில் மாணவர் சேர்க்கை போன்றவை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஆசிரியர்களின் பணப்பலன்கள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் விதிகளுக்கு உட்பட்டு ஆய்வுசெய்து அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்து மாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் பெஞ்சமின் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment