எல்-நினோ ஆபத்தா? 100 ஆண்டுகளுக்கு பிறகு வெளுத்துவாங்குகிறது மழை : மேலும் 4 நாட்களுக்கு கொட்டும்
வட கிழக்கு பருவக் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த நான்கு நாட்களாக நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்ததால் தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் மாலையில் இருந்தே மழை பெய்யத் தொடங்கி படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் இரவில் கொட்டித் தீர்த்தது. நேற்று பகலிலும் கனமழை கொட்டியது.
அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 160 மிமீ மழை பெய்துள்ளது.மரக்காணம் 150 மிமீ, செங்கல்பட்டு, மதுராந்தகம் 130 மிமீ, பொன்னேரி, சோழவரம் 110 மிமீ, சிதம்பரம், செய்யூர், கடலூர் 100 மிமீ, வானூர் 90 மிமீ, தரங்கம்பாடி, நெய்வேலி, சீர்காழி, பள்ளிப்பட்டு 80 மிமீ, அரக்கோணம், திருத்தணி, பண்ருட்டி, திருவள்ளூர், மாமல்லபுரம், மயிலம், தாமரைப்பாக்கம், கலவாய், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, காட்டுமன்னார் கோயில், விழுப்புரம் 70 மிமீ, சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கம்,விருத்தாசலம், ஆர்.கே.பேட்டை, திண்டிவனம், கும்பகோணம், கொடவாசல்,பூந்தமல்லி 60 மிமீ, சென்னை அண்ணா பல்கலைக் கழகம், காஞ்சிபுரம், பெரும்புதூர், நன்னிலம், பாபநாசம், சென்னை டிஜிபி அலுவலகம், காவேரிப்பாக்கம், செஞ்சி, செம்பரம்பாக்கம், திருவாலங்காடு 50 மிமீ மழை பெய்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்துள்ளது. இந்நிலையில், வட கிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 30 நாட்கள் உள்ள நிலையில் பசிபிக் கடல் பரப்பில் வெப்பம் அதிகரித்ததால் (எல்-நினோ) மாற்றம் அடைந்து திடீரென குளிர்காற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது கடல் அலைகள் போல எழுந்தும், தாழ்ந்தும் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் வங்கக் கடல் பகுதியில் வட கிழக்கு பருவக் காற்று சற்று வேகமாக வீசத் தொடங்கியுள்ளது. இந்த காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் காணப்படுகிறது. இதுபோன்ற சூழல் டிசம்பர் 15ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தரைக்காற்று வீசத் தொடங்கும். இரவில் கடுங்குளிர் காற்று வீசும். இந்த நிகழ்வின் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகி, திரள் மேகங்கள் தெற்மேற்கு வங்கக் கடலில் பரவியுள்ளது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டு இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் மழை தொடரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவக் காற்று வேகமாக வீசத் தொடங்கும் பட்சத்தில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும்போது மழை குறையவும் வாய்ப்புள்ளது. 3 மாதத்துக்கான பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பு அளவான 44 செமீ மழை என்பது கடந்த 20 நாட்களில் 53 செமீ அளவுக்கு பெய்துவிட்டது. இது இயல்பு நிலையைவிட கூடுதலானது. கடந்த 100ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழகத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. வரும் நாட்களில் மழையானது தொடருமானால், இந்த ஆண்டில் சராசரியாக 500 மிமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக வட கிழக்கு பருவமழைக் காலங்களில் புயல் போன்ற நிகழ்வுகள் ஏற்படும் போது காற்றுடன் கூடிய மழை பெய்யும். அது பெய்து கொண்டே சென்றுவிடும். ஆனால், இந்த ஆண்டில் தொடர்ச்சியாக காற்றழுத்தங்கள் ஏற்பட்டு, மெதுவாக நகரும் போக்குள்ளதால் மழை நின்று நிதானமாக பெய்கிறது.நேற்றைய நிலவரப்படி கணினி கணக்கின்படி அடுத்த 72 மணி நேரத்தில் அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் புயல் உருவாகும் வாய்ப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டு மீண்டும் பெரும் பாதிப்புகளை சந்திக்க தொடங்கியுள்ளது.
புறநகர் பகுதிகளில் தாம்பரம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, மேடவாக்கம், பள்ளிக் கரணை, வேளச்சேரி, ஆலந்தூர், நங்கநல்லூர், பல்லாவரம், குரோம்பேட்டை, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், துரைப்பாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், எழும்பூர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, வட சென்னை என சென்னையின் அனைத்து பகுதிகளும் மழை நீரில் தத்தளிக்கின்றன. இதற்கிடையே நேற்று இரவு கடல் பகுதியில் இருந்து வீசும் காற்றில்அதிக அளவில் ஈரப்பதம் காணப்பட்டதால் நள்ளிரவில் மாதவரம், அம்பத்தூர், நொளம்பூர், நெற்குன்றம், மதுரவாயல், வளசரவாக்கம், ராமநாதபுரம், நந்தம்பாக்கம், ராமாபுரம், பரங்கிமலை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தவிரவும் புறநகரில் பல இடங்களில்பலத்த மழை பெய்தது. சென்னையின் முக்கிய சாலைகளான வடபழனி 100அடி சாலை, கோயம்பேடு சாலை, ஆற்காடு சாலை, அண்ணாசாலை, சர்தார்பட்டேல் சாலை என அனைத்து முக்கிய சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சில சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டதால் சாதாரண வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை செல்ல முடியாமல் தவித்தன. இதனால் 3 முதல் 5 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment