Powered By Blogger

Friday, 1 July 2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005* -ஒரு சிறப்பு பார்வை.

*தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005*
                   -ஒரு சிறப்பு பார்வை.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் *(Right to Information Act)* என்பது குடிமக்கள் தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நிலைத்தகவல்களை உரிமையுடன் கேட்டுப்பெற வழிவகுக்கும் முக்கியமான சட்டமாகும்.

 2005-ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம் அதற்கு விண்ணப்பிப்பது எப்படி?, அது சம்பந்தப்பட்ட புகாரை எங்கு அளிக்க வேண்டும்? என்பது பற்றி இப்போது காண்போம்...

*மனுவை எப்படி எழுத வேண்டும்?*

💎`ஆமாம்’, `இல்லை’ என்பது போன்ற கேள்வி – பதில் உரையாடலாக இல்லாமல், நமக்குத் தேவையான தகவல் என்ன என்பதை தெளிவாகவும், விரிவாகவும் கேட்க வேண்டும். 

💎உதாரணமாக, ‘நான் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தேன். உரிய நாட்கள் கடந்தும் அது இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. என் விண்ணப்பத்துக்கான ரசீதை இதனுடன் இணைக்கிறேன். என் விண்ணப்பத்தின் நிலைத்தகவல் என்ன? இன்னும் எத்தனை நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை என் கைகளில் கிடைக்கும்? நான் செய்யவேண்டிய அலுவல் எதுவும் இருக்கிறதா?’ என விளக்கமாக எழுதி, தாசில்தார் அலுவலகத்தில் *"ஆர்டிஐ"* மனுவை அளிக்க வேண்டும் (இந்தச் செயல் முறை, புது குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துக் கிடைக்கவில்லை என்றாலும் பொருந்தும்).

நினைவில்கொள்க… போதிய விவரங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். 

*மனுவை யாருக்கு அனுப்ப வேண்டும்?*

💎எந்த அரசு அலுவலகத்தில் தகவல் கோரப்படுகிறதோ, அந்த அலுவலகத்தின் *"பொதுத் தகவல் அதிகாரி*க்கு *"PIO"*  *(Public Information Officer)* அனுப்ப வேண்டும். "பொதுத் தகவல் அதிகாரி" என்பவர், ஒவ்வொரு அரசு சார் நிறுவனங்களின் செய்தித் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்.

💎 *"பெறுநர்"* முகவரியில், ‘பொதுத் தகவல் அதிகாரி’ எனக் குறிப்பிட்டு, எந்த அலுவலகமோ, அதன் பெயரையும் முகவரியையும் குறிப்பிட்டு, அந்த தபாலில் 
10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண முத்திரை வில்லை *(Court Fee Stamp)* ஒட்டி அனுப்ப வேண்டும். 

தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களிடம் தமிழிலேயே மனு அனுப்பி, தமிழிலேயே பதில் தரச் சொல்லிக் கோரலாம்.
 

*"மனுவுக்கு பதில் வரவில்லை என்றால்?*

💎பொதுத் தகவல் அதிகாரியிடம் இருந்து பதில் கடிதம் வரவில்லை என்றால், அவருக்கு மேலே உள்ள *"மேல்முறையீட்டுக்கான அதிகாரி"*க்கு *(Appellate Authority)* மனு அனுப்பலாம். 

💎மனுவில் ‘பொருள்’ என்பதன் கீழ், பொது தகவல் அதிகாரி இந்நாள் வரை தகவல் தராததன் காரணமாக, *"ஆர்டிஐ"* சட்டத்தின் படி அவர் பணிபுரியவில்லை எனத் தெளிவாக குறிப்பிட்டு, முதலில் அனுப்பிய மனுவின் நகலையும் தவறாமல் இணைத்து அனுப்ப வேண்டும். 

*அதிகாரிகள் எத்தனை நாட்களுக்குள் நமக்கு பதில் தர வேண்டும்?*

💎பொதுத் தகவல் அதிகாரி, 30 முழு வேலை நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும். அதே போல, மேல்முறையீடு செய்த அதிகாரியும் 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.

*இரண்டு அதிகாரிகளிடம் இருந்தும் பதில் வரவில்லை என்றால்?*

💎அடுத்ததாக *"ஆர்டிஐ"*யின் தலைமையான மாநில தகவல் ஆணையத்துக்கு… 

*"மாநிலத் தகவல் ஆணையம்",* நம்பர் – 2, ஆலையம்மன் கோயில் தெரு, தி.நகர், சென்னை-18’ என்ற முகவரிக்கு மனு அனுப்பலாம். மிகப்பெரும்பாலும், முதல் இரண்டு மனுக்களுக்கே பதில் கிடைத்துவிடும்.

*மனுவுக்கு பதில் வரும் போது கவனிக்க வேண்டிய அம்சம் என்ன?*

💎தபால் வந்தவுடன், அதைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டு வாங்கும்பட்சத்தில், 
*"உள்ளே உள்ளவற்றை படித்துப் பார்க்காமல் பெற்றுக் கொள்கிறேன்"* என்று ரசீதில் எழுதி, கையெழுத்திட்டுக் கொடுக்கலாம். போதிய தகவல்கள் இல்லை என்று நாம் மேல்முறையீடு செய்யும்போது அது நமக்கு உதவும்.


ALL TRS TN... Siva.

No comments:

Post a Comment