வெள்ள நிவாரண நிதிக்காக கணக்கெடுப்பு தொடக்கம்: குடும்ப அட்டை-வங்கி கணக்கு புத்தகம் இல்லாவிட்டாலும் கவலை வேண்டாம்
வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்பு தொடங்கியது. குடும்ப அட்டை-வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் இல்லாவிட்டாலும், இதுகுறித்த தகவலை கணக்கெடுக்கும் அதிகாரியிடம் தெரிவித்தால் போதும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மழை-வெள்ளம் பாதிக்கப்பட்டு குடிசை வீடுகளை இழந்தோருக்கு ரூ.10 ஆயிரமும், நிலையான வீடுகளில் வசித்து மழை-வெள்ளத்தால் பாதித்தோருக்கு ரூ.5 ஆயிரம் அளிக்கப்படும் என்றும் அவர்களுக்கு 10 கிலோ அரிசி, விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவல்கள்:
வெள்ள நிவாரண கணக்கெடுப்பு களப் பணியில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சென்னை மாவட்டத்தின் 10 வட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பணிகளை மேற்பார்வையிட ஒரு சார் ஆட்சியர், 21 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 21 துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குடும்ப அட்டையை இழந்தோருக்கு...: வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் போது பொது மக்கள் தங்களது குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். இவை சேதம் அடைந்திருந்தாலோ அல்லது அடித்து செல்லப்பட்டிருந்தாலோ தகவலை மட்டும் கணக்கெடுக்கும் அலுவலர்களிடம் தெரிவித்தால் போதும்.
புதிதாக கணக்கு தொடங்கப்படும்: பாதிக்கப்பட்டோருக்கு வங்கி சேமிப்பு கணக்கு இல்லாவிட்டால், தனியாக சேமிப்புக் கணக்கு தொடங்கப்படும். வீடுகள் பூட்டப்பட்டு இருந்தால், கணக்கெடுக்கும் அலுவலர் அந்த வீட்டினை மறுகணக்கீடு என குறிப்பார். பிறகு, மீண்டும் கணக்கீடு செய்யப்படும். சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் முழுமையான கணக்கீடு பணி மேற்கொள்ளப்படும். எனவே, வெள்ள நிவாரண கணக்கெடுப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment