பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்'
'நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.
மாநில அரசுகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள கடித விவரம்: பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை, தினசரி, ஒரு ஆசிரியர் சுவைத்து, சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி, ஒன்று அல்லது இரண்டு பெற்றோர், உணவை, தினசரி சுவைத்து பார்ப்பதை கட்டாயமாக்கும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சுழற்சி முறையில், மாணவர்களின் பெற்றோர், மதிய உணவின் தரத்தை சோதித்து பார்க்கலாம்.
மதிய உணவின் தரத்தை பரிசோதிக்கும் சமயம், இத்திட்டத்தின் கீழ், எத்தனை மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்பதையும், பெற்றோர் அறிந்து, சான்று அளிக்க முடியும். இவ்வாறு, மத்திய அரசு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
12 கோடி மாணவர்கள் :
*நாடு முழுவதும், 12.6 லட்சம் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது
* இந்த உணவை, 12 கோடி மாணவர்கள் சாப்பிடுகின்றனர்
*மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கும் நோக்கில், இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது
*உலகளவில், இந்தியாவில் மட்டுமே, இத்திட்டம் பெரியளவில் நடக்கிறது
*இத்திட்டத்தை, 60ம் ஆண்டுகளில், தமிழக முதல்வராக இருந்த காமராஜர் துவக்கி வைத்தார்.
No comments:
Post a Comment