Powered By Blogger

Wednesday, 16 December 2015

கணினிக் கல்வி அரசு பள்ளிகளில் புறக்கணிக்கப்படுவது ஏன்?

கணினிக் கல்வி அரசு பள்ளிகளில் புறக்கணிக்கப்படுவது ஏன்?

    தமிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாண வர்களுக்கு கற்பிக்க வைப்பதன் ஒரு முயற்சியாக 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் 6, 7,8 ,9, 10 ஆகிய வகுப்புகளுக்கு கணிப்பொறி பாடத்திற் கென புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்தது.


            தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு கணினிக் கல்வியை ஊக்குவிப்பதன் பொருட்டு அரசால் கொண்டு வந்த இந்த கணினி கல்வி மாணவர்கள் மற்றும் மக்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றது. இதற்காக எல்லா அரசுப் பள்ளிகளுக்கும் தேவையான கணிப்பொறி உபகரணங்கள் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கி கணிப்பொறிகள் வழங்கவும் பட்டன.
ஆட்சி மாற்றத்திற்குப்பின் 2011 ஆம் கல்வியாண்டில் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்ததே தவிர, மாணவர்களுக்கு எவ்வித பயனும் அளிக்கவில்லை. அரசு மற்றும் தனியாரின் எல்லா துறைகளும் நவீனமயமாக்கப்பட்ட (கணினி மயமாக்கப்பட்ட) இக்காலத்தில் கணினியின் அடிப்படை அறிவு மாணவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.

மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி. போன்ற அனைத்து வகை பள்ளி களிலும் கணிப்பொறி பாடமானது கடந்த 15 ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டு வருகின்றது. மேலும் எல்லா மேல்நிலைப்பள்ளிகளிலும் கணிப்பொறி அறிவியல் ஒரு பாடமாக கடந்த 15 ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால், சமச்சீர் கல்வி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புமுதல் 10 ஆம் வகுப்புவரை கற் பிக்கப்படும் கணினி கல்வியை அரசுப் பள்ளி களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் புத்தகங்களை மட்டும் இரண்டு கல்வியாண்டுகள் விநியோகித்து, கணினி கல்வியை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்காதது ஏன்?
மக்களின் அடிப்படைத் தேவைகளான எல்லா செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்ற நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே விநியோகம் செய்து வந்த புத்தகங்களைக் கூட கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டது.
இதுகுறித்து பெற்றோர்கள் மத்தியிலும், கல்வி யாளர்கள் மத்தியிலும்கூட போதுமான ஈர்ப்பைப் பெறவில்லை என்பது ஆச்சரியமானதே!
இவ்வளவுக்கும் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் 21000 பேர்களுக்குமேல் இருக்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த நவீன யுகத்தில் மிகவும் இன்றியமையாததான கணினிப் பயிற்சி யைக் கற்றுக் கொடுக்கவேண்டியது அரசின் கடமையாகும்.
இதில் ஏன் தமிழ்நாடு அரசு கருத்துச் செலுத்தவில்லை?
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது; அதன் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணமே கணினிப் பயிற்சி போன்ற மிகவும் தேவையான பயிற்சியை அரசுப் பள்ளிகள் புறக்கணிப்பதுதானே?
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் குவிகிறார் கள் என்றால், அதற்குக் காரணம் கணினிப் பயிற்சி போன்ற கல்விக்கு அப்பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுப்பதுதானே!
கல்வி மானியக் கோரிக்கையின்போது, மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் இதுபற்றிப் பேசியும் பயன் இல்லை.
அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது.
அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் அல்லவா? அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினிப் பயிற்சி அவசியம் அல்லவா! 

இதில் சமூகநீதிக் கண்ணோட்டம் தேவை.

கேரள மாநிலத்தில் 2012 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் வெகு வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது.
கல்வியிற் சிறந்த தமிழ்நாடு ஏன் பின்னோக்கிப் போகவேண்டும்?
தமிழ்நாடு அரசு இத்திசையில் சிந்தித்து செயல்படட்டும்.
வெ.குமரேசன்
மாநில செயலாளர்
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.

No comments:

Post a Comment