பெருமழையல்ல, பேரிடர்!
மழைச் சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பிறகு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.940 கோடியைத் தொடர்ந்து உடனடியாக மேலும் ரூ.1,000 கோடி நிவாரண நிதி தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழக அரசு முன்பு கோரியிருந்த ரூ.8,481 கோடி என்பதே கூடப் போதுமானதாக இருக்காது என்பதால், இதை உடனடி நிவாரண உதவியாகத்தான் கருத முடியும்.
சென்ற வாரம் சென்னையில் அடைமழை கொட்டித் தீர்த்தபோது, அந்த மாமழை ஏற்படுத்திய சேத மதிப்பு ரூ.8,481 கோடி என்று கணக்கிடப்பட்டது. உடனடியாக ரூ,2,000 கோடி மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்தவுடன் ரூ.940 கோடியைப் பிரதமர் வழங்கினார். தற்போது கடந்த மூன்று நாள்களில், சென்னை மாநகர் மீதான பெருமழையின் பழிதீர்ப்புப் படலத்தின் இரண்டாம் தாக்குதலில், சேதத்தின் மதிப்பு இரண்டு மடங்குக்கும் மேலாகிவிட்டது.
மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழு வந்து, தனது ஆய்வுகளை முடித்துக்கொண்டு திரும்பிய பிறகு நேர்ந்த இரண்டாவது தாக்குதலில் நேர்ந்த சேதங்களும் பாதிப்புகளும் அந்த ஆய்வுக் குழுவின் கணக்கில் இருக்காது என்பது உறுதி. பேய்மழையின் இரண்டாவது தாக்குதலையும் மதிப்பீடு செய்து, தற்போது மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை மீண்டும் திருத்தப்பட வேண்டியது அவசியம்.
நூற்றாண்டுப் பெருமழையின் முதல் தாக்குதலின்போது சில ரயில்கள் மட்டுமே ரத்தாகின. விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. வெளியூர் பேருந்துகள் அனைத்தும் இயங்கின. ஆனால், பெருமழையின் இரண்டாம் தாக்குதலில் ஐந்து நாள்களுக்கு விமான நிலையத்தை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் தாம்பரம், செங்கல்பட்டு பகுதியிலான புறநகர் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இன்னமும்கூட ரயில் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
மழை பலி எண்ணிக்கை 269-ஆக உயர்ந்தது. 40% செல்லிடப்பேசி சேவைகள் செயலிழந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மீட்புப் பணியில் இறக்கிவிடப்பட்டனர். இவ்வளவு ஆன பின்னரும், சென்னை பெருமழையைப் பேரிடர் துயரமாக அறிவிக்காமல் இருக்கிறார்களே, ஏன்? இதிலும் கூடவா ஓரவஞ்சனை?
2013-ஆம் ஆண்டு உத்தரகண்டில் பெருமழை வெள்ளத்தால் கேதார்நாத் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்கியது. பிறகு, ரூ.7,346 கோடியை வழங்கியது. அந்தச் சேதம் கங்கைக் கரையோரம் மட்டுமே. உயிரிழப்பும் கட்டுமானங்களும் மட்டுமே சேதமடைந்தன. ஆனால், சென்னை மாநகரம் மட்டுமல்ல, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் இந்தப் பெருமழையால் மிகப்பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
உத்தரகண்ட் பாதிக்கப்பட்டபோது, பொதுத் துறையின் நவரத்ன நிறுவனங்கள் ஓடிவந்து உதவின. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறுவனமும் பல கோடியை உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்தன. நிலக்கரிக் கழகம் மட்டுமே ரூ.125 கோடியை வழங்கியது. இது நீங்கலாக, பல்வேறு அமைப்புகளும் (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் உள்பட) தனியாக நிதி வசூலித்து வழங்கின.
உத்தரகண்ட் வெள்ளத்தின்போது அனைத்து மாநிலங்களும் உடனடியாக நிதி வழங்கின. தமிழகத்தின் தலைநகர் சிதைந்து கிடக்கும் நிலையில், கர்நாடகமும், பிகாரும் தலா ரூபாய் ஐந்து கோடி வழங்க முன்வந்திருப்பது ஆறுதலாக இருக்கிறது. மற்ற மாநிலங்கள் ஏன் இன்னும் உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லை என்று தெரியவில்லை. உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடுத்த நாளே தமிழக அரசு ரூபாய் ஐந்து கோடி அறிவித்தது. ஆனால், இன்று தமிழ்நாட்டுக்கு உதவிட இன்னமும் ஏன் வட மாநிலங்கள் தாமதிக்கின்றன? இது தாமதமா, தயக்கமா?
சென்னையின் துயரத்தை ஆங்கிலக் காட்சி ஊடகங்களும், வட இந்திய ஊடகங்களும் சரியாகக் கொண்டு சேர்க்கவில்லை என்றே கருதத் தோன்றுகிறது. உத்தரகண்ட் மாநிலத்துக்கு கிடைத்த முக்கியத்துவம் சென்னை பேரிடருக்குத் தரப்படவில்லை.
தமிழகத்தின் ஊடகங்கள், சென்னைப் பேரிடரின் தீவிரத்தையும், அது ஏற்படுத்தியுள்ள சேதங்கள் ஒவ்வொரு பிரிவிலும் எத்தகையவை, இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனை காலம் ஆகும், சேத மதிப்பு என்னவாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள், துறை சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்து கேட்டு, மத்திய அரசுக்குப் போட்டியாக தனி மதிப்பீடு செய்திருக்க வேண்டும். ஆனால், தொலைக்காட்சி ஊடகங்களின் பெரும்பாலான நேரமும், சாதாரண மக்களின் கோபக் குரல்களை மட்டுமே ஒளிபரப்பி அரசியலுக்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்காமல், தமிழக அவலம் குறித்து மாநிலங்கள் அவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் பேசியிருப்பது வரவேற்புக்குரியது.
No comments:
Post a Comment