Powered By Blogger

Friday 8 January 2016

பணி நிரந்தரத்துக்காகக் காத்திருக்கும் கெளரவ விரிவுரையாளர்கள்

பணி நிரந்தரத்துக்காகக் காத்திருக்கும் கெளரவ விரிவுரையாளர்கள்

தமிழகம் முழுவதும் 84 அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் 3,350 கெளரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

 தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 2004-ஆம் ஆண்டு சுய நிதிப் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் அப்போதைய அதிமுக அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.கெளரவ விரிவுரையாளர்கள் நியமனம்: சுய நிதி பாடப் பிரிவுகளில் சேர்ந்த மாணவர்களிடம் இருந்து தனியார் கல்லூரிகளில் வசூலிப்பது போலக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

 இதேபோல, மாணவர்களுக்கு பாடம் நடத்த கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதத்துக்கு அதிகபட்சம் 40 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்படும். ஒரு மணி நேரம் பாடம் நடத்த ரூ.100 என்று கணக்கிட்டு, 40 மணி நேரத்துக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, கெளரவ விரிவுரையாளர்களை பணியில் சேர்த்தது.

 12 ஆண்டுகள் கல்விச் சேவை: இவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து 12 ஆண்டுகளாக சொற்ப மதிப்பூதியத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி 84 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 3,350 கெளரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் குறைந்த அளவு மதிப்பூதியத்தில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 மதிப்பூதியம் உயர்த்தப்படுமா?: 2008-ஆம் ஆண்டு இவர்களது மதிப்பூதியம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், 2011-ஆம் ஆண்டு டிசம்பரில் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது.
 இந்த நிலையில், கெளரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

 தமிழகத்தில் பணிபுரியும் 3,350 பேரில் 70 சதவீதம் பேர் நெட், ஸ்லெட், பிஎச்.டி., முடித்துள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையை தமிழக அரசு ஏற்று மதிப்பூதியத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கெளரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 பணி நியமனத்தில் முன்னுரிமை: இதேபோல, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிய பணியிடங்களை நிரப்பும்போது அரசுக் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரிவோருக்கு முன்னுரிமையும், அதிகப்படியான "வெயிட்டேஜ்' மதிப்பெண்களும் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

 இது ஒருபுறமிருக்க, அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் 3,350 பேரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் நலச் சங்க நிர்வாகி கே.ஜீவா கூறியதாவது:
 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று 2011-ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என்றார் அவர்.

திருவண்ணாமலையில் அதிகம்
 தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 2 அரசுக் கல்லூரிகளில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர்.
 திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 111 பேரும், செய்யாறு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 104 பேர் என 215 கெளரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர்.

No comments:

Post a Comment