Powered By Blogger

Saturday 9 July 2016

மாணவர்கள் மோதலால், தலைமை ஆசிரியர் , 10 ஆசிரியர்கள் அதிரடியாக மாற்றம் ..!

மாணவர்கள் மோதலால், தலைமை ஆசிரியர் , 10 ஆசிரியர்கள் அதிரடியாக மாற்றம் ..!
வந்தவாசி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலால், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட, 10 ஆசிரியர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

             திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலுார் 
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,500 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 3ம் தேதி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு, பின் கோஷ்டி மோதலாக மாறியது.

              இதற்கு சம்பந்தமே இல்லாத, செங்கல்பட்டு கலைக்கல்லுாரி மாணவர் கணபதி என்பவர், பிளஸ் 2 மாணவர்கள் மூவரை தாக்கியுள்ளார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, கணபதியை கைது செய்தனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை, ஆசிரியர்கள் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். இருப்பினும், மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து, நடுரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; பின், அவர்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து, 4ம் தேதி, மீண்டும் இருதரப்பு மாணவர்களும், வகுப்புகளை புறக்கணித்து தகராறில் ஈடுபட்டனர். இதனால், கோஷ்டி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்த தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் போலீசார், பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், இருதரப்பு மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.இதைத்தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகுமார், தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், மற்ற ஒன்பது ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கும், இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளதாக, தி.மலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பொன்.குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment