வெள்ளம் வடிந்த பகுதிகளில்மக்கள் செய்ய வேண்டியது என்ன?
சென்னை:'மழை நீர் வடிந்த பகுதிகளில், வீட்டுக்கு செல்வோர் சில முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அவற்றின் விபரம்:
* முதலில் ஆண்கள் நுழைந்து, ஓரளவு சுத்தப்படுத்திய பிறகு, பெண்களை அழைக்க வேண்டும். அடுத்து முதியவர்கள்; கடைசியாக குழந்தைகள்.
* மின்சாரம் இருந்தாலும், உடனடியாக விளக்குகளை, மின் விசிறி களை இயக்க வேண்டாம். ஏனெனில், மின்கசிவு இருக்கக் கூடும். கதவுகள், ஜன்னல்களை திறந்து, முடிந்த அளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.
* மின்சாரப் பொருட்களை இயக்கும் முன், வீடு முழுவதும் ஒரு முறை, எங்காவது மின்கசிவு இருக்கிறதா என சோதியுங்கள். இதை ஒரு எலக்ட்ரிசியனைக் கொண்டு செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால், போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ளவும்.
* அருகில் உள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனையில், தேவையான காய்ச்சல், பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தடுப்பூசி தேவை என்றால், தவறாது போடுங்கள்.
* இரண்டொரு நாட்களுக்கு, மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியில் இருந்து, மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும், உடலும் சகஜ நிலைக்கு திரும்ப, அவகாசம் அளியுங்கள்.
* உங்களையும், உங்கள் குடும்பத்தையும், இந்த அளவுக்கு காப்பாற்றிய இறைவனுக்கும், அவன் அருளால் உங்களுக்கு உதவி செய்த மனிதர்களுக்கும், நன்றி செலுத்துங்கள்
* இந்த பேரிடரில், உங்களை கைவிடாதிருந்த துணிவும், நம்பிக்கையும், வாழ்நாள் முழுவதும், உங்களுக்கு இருக்க வேண்டும் என தீர்மானித்துக் கொள்ளுங்கள்
* எந்த இடரையும் சமாளித்து வெல்லும் அறிவும், திறனும், உங்களுக்கு உண்டு என்று அறிந்து, அமைதி கொள்ளுங்கள்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்துஉள்ளனர். இத்தகவல், 'வாட்ஸ் - ஆப்' மூலம் பரவி வருகிறது.
No comments:
Post a Comment